தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் படைவெட்டு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குப்புசாமியும், அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலை செய்து வந்துள்ள நிலையில் இன்று காலை கீழஆலங்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைக்கு சொந்தமான பாரில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.
மதுபானம் குடித்து சில வினாடிகளில் இருவருக்கும் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டதால் இருவரும் பொது மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குப்புசாமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய இருவரும் உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் ஏற்ற பாருக்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் சீர் வைத்துள்ளனர். பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மதுபானங்களை குடித்ததால் தான் இருவரும் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.