புதுடெல்லி: “பாஜக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுபவராக, குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது.
புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு அழைக்கப்படவில்லை.
இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்.
மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? – 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில், நான்கு மாடிகள் கொண்ட முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, ஏஐஎம்ஐஏ தலைவர் அசாசுதுதீன் ஒவைசி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுகந்து சேகர் ராய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மரபுப்படி, பிரதமர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர்தானே தவிர நாடாளுமன்றத்தின் தலைவர் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
“புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் இல்லை” என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அசாசுதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாகத்தின் தலைவர்தானே தவிர நாடாளுமன்றத்தின் தலைவர் இல்லை. நம்மிடம் தெளிவான அதிகாரப் பகிர்வு உள்ளது. மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கலாம். இது மக்களின் வரிப் பணம். பிரதமர், அவருடைய நண்பர் தனது சொந்த பணத்தில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிக்கொடுத்ததைப் போல நடந்து கொள்கிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்திற்காக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப்பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய கட்டிடத்தில் மக்களவையில் 543 இருக்கைகளே உள்ள நிலையில் புதிய கட்டிடத்தில் இருக்கைகள் எண்ணிக்கை அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநிலங்களவையிலும் 250க்குப் பதிலாக 300 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்கள் மக்களவையில் தான் நடக்கும் என்பதால் அங்கே மொத்தமாக 1,280 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
It looks like the Modi Govt has ensured election of President of India from the Dalit and the Tribal communities only for electoral reasons.
While Former President, Shri Kovind was not invited for the New Parliament foundation laying ceremony…
1/4
— Mallikarjun Kharge (@kharge) May 22, 2023