போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் நாடுகள் அனைத்திலும் இந்தியா டயாலிசிஸ் பிரிவுகள் அமைக்கும்; கடல் ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பாடு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இந்தியா – பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், மது விவாதங்களில் இருந்து உருவான கருத்துக்களை நிச்சயமாக நாம் பரிசீலிப்போம். நாம் பகிரப்பட்ட சில முன்னுரிமைகளையும், பசிஃபிக் தீவு நாடுகளின் தேவைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பில் நமது முயற்சி என்பது இந்த இரண்டு அம்சங்களை மனதில் கொண்டு முன்னேறுவதாகும். ஃபிப்பிக் அமைப்பிற்குள் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க அறிவிப்புகளை வெளியிட நான் விரும்புகிறேன்.
பசிஃபிக் பிராந்தியத்தில் சுகாதார கவனிப்பை ஊக்கப்படுத்த ஃபிஜியில் உயர் சிறப்பு இருதயவியல் மருத்துவமனையை திறப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவமனை பயிற்சி பெற்ற ஊழியர்களையும் நவீன வசதிகளையும், அடிப்படை கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இது ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் உயிர்காப்பு சேவையை வழங்கும். பிரம்மாண்டமான இந்த நவீன திட்டத்தின் முழு செலவையும் இந்திய அரசு ஏற்கும்.
பசிஃபிக் தீவு நாடுகள் அனைத்திலும் டயாலிசிஸ் பிரிவுகளை அமைக்க இந்தியா உதவிசெய்யும். பசிஃபிக் தீவு நாடுகள் அனைத்திலும் கடல் ஆம்புலன்சுகள் வழங்கப்படும் என்றார்.
மேலும் ஃபிஜி பிரதமர் சிட்டிவேணி லிகமமடா ரபுகாவை இன்று போர்ட் மோர்ஸ்பி-யில் இந்தியப்- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இவ்விரு தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை. அப்போது, கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமது ஃபிஜி பயணத்தின் போது, இந்தியப்- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பை அறிமுகம் செய்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, பசிபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு தற்போது வரை மேம்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல போர்ட் மோர்ஸ்பி-யில், பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.3-வது உச்சி மாநாட்டை இணைந்து நடத்துவதற்காகவும், தமக்கு உற்சாக வரவேற்பு அளித்தமைக்காகவும், அந்நாட்டுப் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜென்ரல் சர் பாப் டாடேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார் .
அத்துடன் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அறிஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இவர்கள் இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் கீழ், இந்தியாவில் பயிற்சி பெற்ற அரசு உயரதிகாரிகள், முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் சமூதாயகத் தலைவர்கள் ஆவர்.
உயர் விருது: பப்புவா நியூ கினியாவின் அரசு இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அந்நாட்டின் கவர்னர் ஜென்ரல் சர் பாப் டாடே, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்டர் ஆஃப் லோகோஹூ கிராண்ட் கம்பேனியன் விருதினை வழங்கினார். இது பப்புவா நியூ கினியாவின் உயரிய சிவிலியன் விருதாகும். இந்த விருதினைப் பெறுபவர் “முதல்வர்” என்ற பட்டத்தைப் பெறுவார்.