போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினி நாட்டின் தோக்பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
தென்மேற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூ கினி நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பப்புவா நியூ கினியின் தேசிய மொழியான தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ, புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது: பப்புவா நியூ கினி நாட்டில் தோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும், பிரதமர் ஜேம்ஸ் மாரப்புக்கும் கிடைத்துள்ளது. திருக்குறள் நூல் தலைசிறந்த படைப்பு ஆகும். இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.
தோக் பிசின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க முயற்சி எடுத்த பப்புவா நியூ கினி நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண முதல்வர் சசீந்திரன் முத்துவேல், அவரது மனைவி சுபா சசீந்திரனை பாராட்டுகிறேன். சசீந்திரன் பள்ளிப்படிப்பை தமிழில் கற்றுத் தேர்ந்துள்ளார். அவரது மனைவி சுபா பன்மொழி அறிஞர். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக வம்சாவளி முதல்வர்: பப்புவா நியூ கினி நாட்டில் 9.44 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு சுமார் 3,000 இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். அங்கு உள்ள வெஸ்ட் நியூ பிரிட்டன் என்ற மாகாணத்தின் முதல்வராக தமிழகத்தின் சிவகாசியை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல் (48) பதவி வகிக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பப்புவா நியூ கினிநாட்டுக்கு முத்துவேல் சென்றார். அங்கு சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனம், பப்புவா நியூ கினி நாட்டில் செயல்பட்ட தனது கிளைகளை நிரந்தரமாக மூடியது. அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்; இல்லாவிட்டால் புதிய வேலையில் சேர வேண்டும் என்ற நிலை சசீந்திரனுக்கு ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த அவர், ஹமானஸ் டிரேடிங் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் தற்போது நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
வணிகம் மட்டுமன்றி மக்கள் சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு, பிரபலமான அவர் மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் களமிறங்கினார். அந்நாட்டு மக்களின் அபிமானத்தை பெற்று, முதலில் பப்புவா நியூ கினி எம்.பி.யாகதேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
அவரும், அவரது மனைவியும் இணைந்து பப்புவா நியூ கினியின்தோக் பிசின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.