பெங்களூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்களையும் சால்வைகளையும் கொடுப்பதற்கு பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதே வழியை தற்போது சித்தராமையாவும் பின்பற்ற தொடங்கியுள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற்றியது. பாஜக 66 தொகுதிகளிலும் , மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க தயாரான நிலையில் முதல்வர் பதவிக்காக சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 5 நாட்கள் இழுபறி நீடித்த நிலையில், சோனியா காந்தி தலையிட்டு டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து துணை முதல்வர் பதவியை ஏற்க டிகே சிவக்குமார் சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், பெங்களூரில் உள்ள கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வராக சித்தரமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகா விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பதவியேற்பு விழா முடிந்ததும் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களான மகளிருக்கு இலவச பேருந்து சேவை, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்பட 5 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மூனறு நாட்களுக்கு புதிய ஆட்சியின் முதல் சட்ட சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடக முதல்வராக 2-வது முறையாக சித்தராமையா பதவியேற்று இருக்கும் நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தனது கார் கன்வாய் செல்லும் போது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தக்கூடாது எனவும் சாலைகளில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் சித்தரமையா கூறியிருந்தார்.
இதற்கு முன்பாக பசவராஜ் பொம்மையும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றினார் என்றாலும் சித்தராமையும் முதல்வர் பதவி ஏற்ற மறுநாளே பெங்களூரு போலீசாருக்கு ஜிரோ டிராபிக் விதியை தனக்காக பின்பற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டது மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.
இந்த நிலையில், தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்களை கொடுக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்குமாறும் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்களை தருமாரும் பூங்கொத்து வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதனைப் பின்பற்றி முதல்வர் மு. கஸ்டாலினை சந்திக்க செல்லும் முக்கிய பிரமுகர்கள் உள்பட யாராக இருந்தாலும் பூங்கொத்து பொன்னாடைகளுக்கு பதிலாக புத்தகங்களையே அன்பளிப்பாக கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் வழியை பின்பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அதே முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே மகளிருக்கு இலவச பயணம்,
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழகத்தை பார்த்து கர்நாடக அரசு செயல்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.
பிரதமர் மோடியும் கடந்த 2017 ஆம் ஆண்டே பூங்கொத்துக்களுக்கு பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்குமாறு வலியுறுத்தி பேசியிருந்தார். புத்தகம் வாசிப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் எதுவும் இல்லை எனவும் அறிவுதான் சிறந்த பலம் என்றும் பிரதமர் மோடி கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.