புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ)உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட மறுநாளான நேற்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறும்போது, “டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது” என்றார்.