ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் மூன்றாவது ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் வருகை தந்துள்ளனர்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கான திரைப்பட சுற்றுலா எனும் கருப்பொருளில் நடைபெறும் முதல் அமர்வில் பங்கேற்பதற்காக ஸ்ரீநகர் வருகை தந்துள்ள நடிகர் ராம் சரண், “சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த இடம் காஷ்மீர். 1986ம் ஆண்டில் இருந்து நான் இங்கு வந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள குல்மார்க், சோனாமார்க் பகுதிகளில் நடைபெற்ற ஏராளமான படப்பிடிப்புகளில் எனது தந்தை பங்கேற்றுள்ளார். 2016ல் இந்த அரங்கில் நான் நடித்துள்ளேன். ஒவ்வொருவரையும் ஈர்க்கக்கூடிய இடம் காஷ்மீர்” என தெரிவித்தார்.
“திரைப்படப் படப்பிடிப்புக்கு காஷ்மீரை விட சிறந்த இடம் வேறு இருக்க முடியாது. காஷ்மீரின் எந்த ஒரு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்க உள்ளோம்” என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், அரசு பிரதிநிதியுமான அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
“ஜி20 கூட்டத்தை காஷ்மீரில் நடத்துவதன் மூலம், நாம் அனைவரும் ஒன்றே என்ற உணர்வை இங்குள்ள மக்கள் பெறுவார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கு நடத்துவதன் மூலம், படப்பிடிப்புகளை நடத்துவதற்கு காஷ்மீர் பாதுகாப்பான இடம் என்ற செய்தி அனைவரையும் சென்று சேரும்” என தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவரான அபிஜீத் பாடில் தெரிவித்துள்ளார். “காஷ்மீருக்கு இது மிகச்சிறந்த நாள். உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் இன்று காஷ்மீர் வந்துள்ளனர். சுற்றுலாவுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்” என ஸ்ரீநகரில் உணவகம் நடத்தி வரும் முஷ்டக் சாயா என்பவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு அந்த யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள விமான விமான நிலையம் முதல், மாநாட்டு அரங்கம் வரை போலீசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டு அரங்கத்திற்குள் வெளியாட்கள் நுழைய முடியாதபடி பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.