ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 பணிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது. எனவே பல அடுக்கில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அதிகாரிகள் பலர் வருகை தர இருக்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் தொடங்குகிறது.
தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷமீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் 60க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
அதேபோல இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவம், ஸ்ரீநகர் போலீஸ், சிஆர்பிஎஃப், தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை கமாண்டோக்கள் என பலரும் ஜபர்வன் மலைத்தொடர் முதல் தால் ஏரி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ட்ரோன் எதிர்ப்பு படை, தனியாக வாகன சோதனை சாவடிகள், வெடிகுண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் என பாதுகாப்பு டைட் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காஷ்மீரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. அது போல சீனாவும், ஈரானும் கூட காஷ்மீரில் நடத்தும் கூட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து கூட்டத்தை தவிர்ப்பதாக கூறியிருந்து. மேலும் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரித்து வரகின்றனர். சிலர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றதால் அவர்கள் பதில் தாக்குதலில் மரணித்துள்ளனர். எது எப்படியாயினும் இந்த கூட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருக்கிறது.