மத்திய அரசு நாளை முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட மத்திய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000 வரை வங்கியில் வரவு வைக்க முடியும் என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலையில் உள்ளது
எனவே 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட வண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும் வழி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும் படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்து விவரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது” என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும், அரசு பேருந்துகளில் பயணிகள் தரும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், பயணிகள் தவிர வெளிநபர்கள் தனியார் நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி இல்லை எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் நாளை முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெற எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எனினும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போன்று அரசு பேருந்து நடத்துனர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.