சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா ஷர்மா, யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தை சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். விபுஷ்ஷா தயாரித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் பிற மதத்தை சேர்ந்த பெண்களை மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. ஆனால் சில அமைப்பினர் திரையரங்குகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திரையரங்குகளில் இருந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நீக்கப்பட்டது. இதனிடையே மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாததை எதிர்த்து படக்குகுழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை நீக்கிவிட்டதாக தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திரையரங்குகளில் படம் பார்க்க செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டது.
மேலும் மேற்கு வங்க அரசு தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விதித்த தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் சில திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நேற்று தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார்.
நுங்கப்பாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.