போர்ட் மோர்ஸ்பி,- பிஜி, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள், தங்களது நாட்டின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தன. ‘தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையில், அணி திரள்வோம்’ என்றும் பசிபிக் நாடுகள் உறுதி அளித்துள்ளன.
ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலாவதாக, கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்ற பிரதமர் மோடி, ‘ஜி – 7’ மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்த பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு, இந்திய – -பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு முதன் முறையாக சென்றார்.
அங்கு அவரை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இந்திய – -பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியா – 14 பசிபிக் தீவு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர் ஆலோசனைநடத்தினார்.
இதில், பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரோப் பேசியதாவது:
வலிமையான குரல்
தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையில், நாங்கள் அணி திரள்வோம். ஜி – 20, ஜி – 7 போன்ற சர்வதேச அமைப்புகளில், சிறிய நாடுகளுக்கான வலிமையான குரலாக இந்தியா ஒலிக்க வேண்டும்.
பசிபிக் தீவு நாடுகள் சிறியதாகவும், எண்ணிக்கையில் குறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால், பசிபிக் பிராந்தியத்தில் நாங்கள் பெரிய நாடுகள். வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்காக உலகம் எங்களை பயன்படுத்திக் கொள்கிறது.
தெற்கு உலகின் தலைவராக இந்திய பிரதமர் மோடி இருக்கிறார். சர்வதேச விவகாரங்களில்அவரது தலைமையை ஏற்று பின்தொடருவோம். பசிபிக் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தெற்கு உலகின் தலைவரான பிரதமர் மோடி ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, அரசு மாளிகையில் நடந்த விழாவில், பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே, அந்நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் கம்பானியன் ஆப் ஆர்டர் ஆப் லோகோஹு’ விருதை, பிரதமர் மோடிக்குவழங்கினார்.
பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கான காரணத்திற்காகவும், உலகளாவிய தெற்கின் காரணத்தை முன்னெடுத்து சென்றதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டதாக பப்புவா நியூ கினியா அரசு தெரிவித்தது. அமெரிக்க முன்னாள்அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட ஒரு சிலரே இந்த விருதை பெற்றுள்ளனர்.
வரவேற்பு
முன்னதாக, பிஜி நாட்டின் உயரிய விருதான, ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ விருதை, அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
பப்புவா நியூ கினியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி, சிறப்பு விமானம் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் வரவேற்றார்.
மேலும், பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருக்குறள் நுால் வெளியீடு
‘உலகப் பொதுமறை’ என போற்றப்படும்திருவள்ளுவரின் திருக்குறள் நுாலை, பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ மொழியான தோக் பிசினில், பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப் வெளியிட்டனர்.இந்த நுாலை தமிழகத்தில் இருந்து சென்று அங்கு வசித்து வரும், சுபா – அவரது கணவரும், அங்குள்ள மாகாண கவர்னருமான சசீந்திரன் முத்துவேல் ஆகியோர் மொழிபெயர்த்தனர். சசீந்திரன், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.
உலக தலைவர்களுக்கு
பிரதமர் மோடி விருந்துபப்புவா நியூ கினியாவில் நடந்த இந்தியா – பசிபிக் நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களுக்கு, பிரதமர் மோடி நேற்று மதிய உணவு விருந்து அளித்தார். இதில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரபலமான காந்த்வி, மலாய் கோப்தா, வெஜிடபிள் கோலாபுரி, தால் பஞ்சமெல் உள்ளிட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்