பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் இந்தோ – பசுபிக் ஒத்துழைப்பிற்கான அமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்று அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் பிரதமர் மோடியை வரவேற்றார்.
முதலில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வரவேற்ற அவர் மோடியின் கால்களை தொட்டு ஆசி பெற்றார். தொடர்ந்து அந்நாட்டு அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். நடன கலைஞர்கள் அந்நாட்டின் பாரம்பரிய நடனமாடியும் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளது பப்புவா நியூகினியா அரசு.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தங்களின் பாரம்பரிய பழக்கத்திலும் சில மாற்றத்தை செய்திருந்தது பப்புவா நியூகினியா. அதாவது சூர்யா அஸ்தமனத்திற்கு பிறகு அந்நாட்டு தலைவர்கள் யாரையும் வரவேற்க மாட்டார்கள். ஆனால் இந்திய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை, சிவப்புக் கம்பளம் என சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பப்புவா நியூகினிய தீவுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடிதான். இந்நிலையில் பப்புவா நியூகினியாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மரியாதையையும் அந்நாட்டு பிரதமர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதும் பெரும் பேசு பொருளாகியுள்ளது. இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவின் பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பிரதமர் மோடியின் காலை தொட்டு பப்புவா நியூகினியா பிரதமர் ஆசி பெற்ற வீடியோவை ஷேர் செய்து நெகிழ்ந்துள்ளார். மேலும், கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும், மோடி சனாதன தர்மத்தின் தூதுவர், அவர் ஒரு கர்ம யோகி என்றும் புகழ்ந்துள்ளார்.
அதனால்தான் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தவுடன் அவரிடம் ஆசிர்வாதம் பெறுகிறார் என்றும் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.