சென்னை: Sarath Babu Death (சரத்பாபு உயிரிழப்பு) நடிகர் சரத்பாபு உயிரிழப்புக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கில் ராமராஜ்யம் படத்தின் நடிகராக அறிமுகமான சரத்பாபுவுக்கு தமிழ் சினிமா பெரிய அடையாளத்தை கொடுத்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200 படங்கள்வரை நடித்திருக்கிறார். சினிமாத் துறையில் ஈகோ இல்லாமல் வாழ்ந்த மிக சிலரில் சரத்பாபு ஒருவர் என திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறுவதுண்டு.
உடல்நலக்குறைவு: சரத்பாபு கடைசியாக தமிழில் வசந்தமுல்லை படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ஓய்வில் இருந்தார். ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக முதலில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சென்று ஐசியூவில் இருந்தார்.
உயிரிழந்த சரத்பாபு: கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சரத்பாபு உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71. ஹைதராபாத்தில் இருக்கும் அவரது உடல் சென்னை தி.நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு எடுத்து வரப்படும் என்றும், சென்னையில்தான் அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. சரத்பாபுவின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
ரஜினியின் இரங்கல்: அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியுடன் அவர் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், முத்து, அண்ணாமலை, பாபா உள்ளிட்ட படங்கள் கவனம் ஈர்த்தவை. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தின் குட் புக்கில் தொடர்ந்து இடம்பெற்றவரும் சரத்பாபு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நண்பராக தோன்றி பின் துரோகியாக மாறும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் அட்டகாசம் செய்திருப்பார் சரத்பாபு.
கமல் ஹாசன் இரங்கல்: முன்னதாக கமல் ஹாசன் தெரிவித்த இரங்கலில், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்திருந்தார்.