விஜய், வெங்கட்பிரபு கூட்டணியின் ‘விஜய் 68’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படப்பிடிப்பு எப்போது? கதாநாயகி யார்? என்பது குறித்து விசாரித்தேன்.
நடிகர் விஜய், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத் உள்பட பலரும் அதில் நடித்து வருகின்றனர்.காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகிற செப்டம்பருக்குள் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தையும் அறிவித்துவிட்டனர். வெங்கட்பிரபு இயக்கும் இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது தயாரிப்பு என்பதால், பெருமைமிகு தயாரிப்பாக உருவாக உள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். `மாநாடு’ போல இதுவும் டைம் லூப் கதை என்றும் கதாநாயகியாக தமன்னாவும், ‘கஸ்டடி’ கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் பரிசீலனையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். `மாநாடு’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யலாம் என்றும் பேச்சு. அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் வருவதால், ‘விஜய் 68’ டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அறிவிக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் டேனி போப், நடிப்பு தொடர்ப்பாக ஒரு பயிற்சிப் பட்டரை தொடங்கியுள்ளார். அந்த நிகழ்வில் வெங்கட்பிரபு ‘விஜய் 68’க்கான கேக் வெட்டி கொண்டாடினார். அந்த நிகழ்வில் அவர் பேசியதிலிருந்து..
“ஆடியன்ஸ் எங்கிட்ட என்டர்டெயினிங் தான் எதிர்பார்க்குறாங்க. `மங்காத்தா’ சீரியஸ் படமா? காமெடி படமா?ன்னு கேட்டால் அது ‘ஹீஸ்ட்’ ஜானர். அதைப் போல `மாநாடு’. படத்துல நிறைய விஷயம் சொல்லியிருப்பேன். அதை நீங்க காமெடி படமா யோசிக்கிறீங்களான்னு தெரியாது. என்னைப் பொறுத்தவரை, ஒரு கன்டன்ட்டை எடுத்தால், அதை பொழுதுபோக்கா சொல்ல விரும்புவேன். தெலுங்கில் எமோஷனல் நிறைய எதிர்பார்ப்பாங்க. அதனால என்னோட விஷயங்களைக் குறைச்சு, பண்ணின படம்தான் `கஸ்டடி’. சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே தெரியும்னு யாராலயும் சொல்ல முடியாது. எல்லாமே கத்துக்கற முயற்சிதான். ஒவ்வொரு விஷயங்கள் முயற்சிக்கும்போதும், கத்துக்கலாம். கடைசி வரை கத்துக்கிட்டேதான் இருக்கணும். வெற்றி, தோல்வி ரெண்டையுமே தலையில ஏத்திக்கக் கூடாது. அப்படி ஏத்திக்கிட்டா, ஜாலியா வொர்க் பண்ண முடியாது. தோல்வியையும் ஜாலியா விட்டுடணும். வெற்றியையும் ஜாலியா விட்டுடணும். ரெண்டையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணனும்” எனப் பேசியிருக்கிறார்.