செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபோதையில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி அலப்பறை செய்த நபர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி என்றும் அவரை ஒரு போலீஸ்காரர் உருவ கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 32 வயதாகிறது. ஆயினும் இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியாவார். இவர் சொந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் வாகன சோதனை செய்தபோது மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜை மடக்கிய போலீஸார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது நாகராஜ் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். போதையில் நாகராஜ் செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த நபர் ஒரு டீசர்ட்டையும் நீல நிறத்தில் டவுசரையும் போட்டிருந்தார். அவர் போதையில் போலீஸாரை இஷ்டத்திற்கு வசை பாடினார். போலீஸாரை கண்ட படி பேசியுள்ளார். உடனே போலீஸார் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டவுடன் பம்மிய நாகராஜ், ஒவ்வொரு போலீஸாரையும் நீ எந்த ஊரு நீ எந்த ஊரு என கேட்க அவர்களும் நான் ஜப்பான், நான் கொரியா என பதிலளித்தனர்.
அப்போது போலீஸார் நீதான் தைரியமான ஆளாச்சே, முன்னாடி ஏதோ எங்களை சொன்னியே அதை இப்போ சொல்லேன் பார்ப்போம் என்றனர். அதற்கு நாகராஜ் அதெல்லாம் சொல்ல முடியாது என்கிறார். ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றிவிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என சண்டைக்கு வருமாறு சவால் விட்டார். போலீஸார் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் கேட்கவில்லை. காமெடி பீசு என சொன்ன போலீஸாரிடம் யார் காமெடி பீசு என அடிக்க பாய்ந்தார் நாகராஜ்.
போலீஸார் வாடா போடா என நாகராஜ் சொல்லிய நிலையில் அவரை நீ என் கால் உயரம் கூட இல்லை எங்களையே மிரட்டுறியா என போலீஸார் உருவ கேலி செய்வது போல் பேசியிருந்தனர். பின்னர் டவுசரில் இருந்த காசுகளை எல்லாம் வீசும் நாகராஜ், இதுக்குத்தானே என்னை இப்படி செய்றீங்க இந்தாங்க என கோபமாக பேசி கண்ணீர் விட்டு அழுகிறார்.
தொடர்ந்து ரகளை செய்த நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது வழுக்கி விழுந்ததால் எதிர்பாராதவிதமாத இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீஸார் அவருக்கு காலில் மாவுக்கட்டையும் போட்டுவிட்டுள்ளனர். இதுகுறித்து நாகராஜ் கூறுகையில் என் காலை உடைத்தது போலீஸ்தான். மூன்று போலீஸார் சேர்ந்துதான் என் காலை உடைத்தார்கள் என தெரிவித்தார்.