கடலூர்: நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை ஆளுநர் நியாயப்படுத்தி பேசுவதாகக் கூறி, சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான இன்று (மே.23) மதியம் சாலை மார்க்கமாக கடலூர் வழியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி செல்வதற்காக வருகை தர இருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் கடலூர் நகருக்குள் வரும்போதே சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர், மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக ஆளுநர் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை ஆளுநர் நியாயப்படுத்தி பேசுவதாகக் கூறி அவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று (மே.23) மதியம் கடலூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் மதியம் சுமார் 4 மணியளவில் சீர்காழிக்கு புறப்பட்டுச் சென்றனார். ஆளுநர் வருகையையொட்டி சிதம்பரம் வண்டிகேட் பகுதி, நகரின் முக்கிய பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை பகுதி ஆகிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.