கான்பெரா: ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து பணியாற்றும் குவாட் அமைப்பின் முக்கிய கூட்டம் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இன்று சிட்னியில் புலம் பெயர் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், “நான் இந்த மேடையில் பிரபல பாடகர் ராக்ஸ்டார் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை இங்கு பார்த்திருக்கிறேன். ஆவர் அவருக்கு கிடைத்த வரவேற்பை விட நரேந்திர மோடிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்தான் உண்மையான பாஸ்.
இந்தியாவை பொறுத்த அளவில் அது ஒரு சிறப்பான அழகான நாடு. இந்திய பெருங்கடல் பரப்பல் இருக்கும் முக்கியமான நாடும் கூட. நான் பிரதமராக பதவியேற்று ஏறத்தாழ ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஆனால் நாங்கள் இதற்கிடையில் 6 முறை சந்தித்துக்கொண்டோம். இந்த சந்திப்புகள் இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
மட்டுமல்லாது இது ஒரு ஜனநாயக நாடும் கூட. எனவே இதில் முதலீடுகளை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். அதேபோல அங்கிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்த மக்களால் ஆஸ்திரேலியாவும் வளமிக்கதாக மாறியுள்ளது. இரு நாட்டிற்குமான உறவை கிரிக்கெட் போட்டிகள் மேலும் பலப்படுத்துகின்றன. மீண்டும் ஓர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மோதுவோம்” என்று கூறியிருந்தார்.
பின்னர் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியர்களும் ஆஸ்திரேலிய மக்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளால் இணைந்து இருக்கிறோம். கிரிக்கெட் இந்த இணைப்பு பாலத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் சுகங்களை மட்டுமல்ல, துங்கங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்நாட்டின் ஸ்பின் பவுலர் ‘ஷேன் வார்னே’ மரணம் லட்சக்கணக்கான இந்தியர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு நீண்ட நாட்களாக பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். அதேபோல மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான ஹாரிஸ் பார்க்கை ‘குட்டி இந்தியா’ என அழைக்கப்படும் என்று நண்பர் அல்பனீஸ் கூறியதற்கு நன்றி. இந்த பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் இந்தியாவின் பண்டிகையான தீபாவளி உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இப்படி என்னையும், நம் நாட்டை சேர்ந்தவர்களையும் கொண்டாடும் புலம் பெயர் மக்களான உங்களது அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் உங்களுடன் இணைந்திருப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சிமிக்க தருணமாகும். இங்கு வாழும் இந்தியர்கள் அடுத்த முறை நம் நாட்டுக்கு வரும்போது உங்கள் ஆஸ்திரேலிய நண்பர்களை அழைத்து வாருங்கள். இந்தியாவுடன் அவர்கள் அறிமுகம் ஆக அது சிறந்த வாய்ப்பாக அமையும்.
அதேபோல ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை லார்ட் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிக்க நன்றி. இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். இப்படியாக இந்தியா-ஆஸ்திரேலியா உறவானது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்துள்ளது. நமது வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் யோகா நம் அனைவரையும் இணைத்துள்ளது.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.