சிட்னி,
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு நேற்று சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர்.
அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில் வெள்ளம்போல் மக்கள் திரண்டிருந்தனர். இந்திய கொடியை அசைத்தபடியும், ஆராவாரத்துடன் அவர்கள் உற்சாகப்படுத்தி கொண்டும் இருந்தனர்.
இதில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி முதலில் பேசும்போது, கடந்த முறை இதே மேடையில் கடைசியாக காணப்பட்டவர் புரூஸ் ஸிபிரிங்ஸ்டீன் (அமெரிக்க பாடகர்). ஆனால், பிரதமர் மோடிக்கு கிடைத்த அளவுக்கு அப்போது அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடியே பாஸ் (தலைவர்) என பேசினார்.
இதன்பின் பிரதமர் மோடி பேசும்போது, 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, உங்களுக்கு நான் ஒரு உறுதிமொழி வழங்கினேன். இந்திய பிரதமர் ஒருவருக்காக நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்காது என கூறினேன். அதனால், சிட்னி நகருக்கு நான் மீண்டும் வந்துள்ளேன்.
இதற்கு முன்பு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உறவுகள் 3 சி-க்களை (ஆங்கில எழுத்து) கொண்டு வரையறுக்கப்பட்டன. அவை காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி ஆகியவை ஆகும். அதன்பின்பு, நமது உறவுகள் மூன்று டி-க்களை (ஆங்கில எழுத்து) கொண்டு வரையறுக்கப்பட்டன. அவை, ஜனநாயகம், வம்சாவளியினர் மற்றும் நட்பு ஆகியவை ஆகும்.
சிலர் நமது உறவுகள், எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை சார்ந்து உள்ளது என கூறினர். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவானது, அதற்கும் மேற்பட்டது என நான் நம்புகிறேன். அது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலானது என கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான தூதரக உறவுகளால் மட்டுமே பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மதிப்பு வளர்ந்து விடவில்லை. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்தியர்களாகிய நீங்கள் அனைவருமே இதற்கான உண்மையான காரணம் மற்றும் உண்மையான சக்தியும் ஆகும் என பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய தூதரகம் ஒன்று திறக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். ஹாரிஸ் பார்க் பகுதியில் ஜெய்ப்பூர் சுவீட்சில் சத்காஜ் சாட் மற்றும் ஜிலேபி அதிக தித்திப்பாக இருக்கும் என நான் கேள்விப்பட்டேன்.
எனது நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிசை நீங்கள் அனைவரும் அந்த பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் பேசியுள்ளார். நமது நட்பானது, மைதானத்திலும் கூட ஆழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஷேன் வார்னே மறைந்தபோது, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் துக்கம் வெளிப்படுத்தினர். எங்களுக்கு நெருங்கிய ஒருவரை இழந்த உணர்வை நாங்கள் அடைந்தோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவில் திறமைக்கோ அல்லது வளங்களுக்கோ பஞ்சம் இல்லை. இந்தியா தற்போது பெரிய மற்றும் இளம் திறமையாளர்களின் தொழிற்சாலையாக திகழ்கிறது என ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் முன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.