கான்பெரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மோடியை, ‘பாஸ்'(Boss) என ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்திருக்கிறார்.
ஜப்பானில் ஜி7 நாடுகளின் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அதன் பின்னர் அங்கிருந்து இந்தியா-பசிபிக் தீவுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கிரு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற புலம் பெயர் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்திய கலை நிகழ்ச்சிகள் இவர்கள் பங்கேற்றிருந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது. இதனையடுத்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், “நான் இந்த மேடையில் பிரபல பாடகர் ராக்ஸ்டார் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை இங்கு பார்த்திருக்கிறேன். ஆவர் அவருக்கு கிடைத்த வரவேற்பை விட நரேந்திர மோடிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்தான் உண்மையான பாஸ்.
இந்தியாவை பொறுத்த அளவில் அது ஒரு சிறப்பான அழகான நாடு. இந்திய பெருங்கடல் பரப்பல் இருக்கும் முக்கியமான நாடும் கூட. நான் பிரதமராக பதவியேற்று ஏறத்தாழ ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஆனால் நாங்கள் இதற்கிடையில் 6 முறை சந்தித்துக்கொண்டோம். இந்த சந்திப்புகள் இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
மட்டுமல்லாது இது ஒரு ஜனநாயக நாடும் கூட எனவே இதில் முதலீடுகளை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். அதேபோல அங்கிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்த மக்களால் ஆஸ்திரேலியாவும் வளமிக்கதாக மாறியுள்ளது. இரு நாட்டிற்குமான உறவை கிரிக்கெட் போட்டிகள் மேலும் பலப்படுத்துகின்றன. மீண்டும் ஓர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மோதுவோம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் ஆஸ்திரேலியா வந்திருந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அவரது ரசிகர்களால் அவர், ‘பாஸ்’ என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை காண வந்த கூட்டத்தை விட நரேந்திர மோடியை காண வந்த கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆஸ்திரேலிய பிரதமர், மோடியை பாஸ் என்று அழைத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘குவாட்’ அமைப்பு ராணுவ கூட்டணியை நோக்கி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவுக்கு எப்படி ரஷ்யா மீது கோபம் இருந்து, அதனை பழிவாங்க உக்ரைனை பயன்படுத்தியதோ அதேபோல சீனா மீது இருக்கும் கோபத்தை பழிதீர்த்துக்கொள்ள இந்தியாவை பலி ஆடாக மாற்ற முயற்சிக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஆசியாவில் அமெரிக்காவுக்கு என ராணுவ தளம் பெரிய அளவில் கிடையாது. என்னதான் ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருந்தாலும், சீனாவை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே தன்னுடைய தளம் அமைக்க உறுதியான ஒரு பார்ட்னர் வேண்டும் என்று இந்தியாவை தன்னுடன் அமெரிக்கா இணைத்துக்கொண்டுள்ளது. இப்படியாதான் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடனும் இந்தியா நெருக்கமாகியுள்ளது.
இத்தனை நாட்களாக சுதந்திரமான இந்தியா-பசிபிக் மண்டலம் மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு என்று இந்தியா இந்த குவாட் நாடுகளுடன் இணைந்து செயலாற்றி வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நான்கு நாட்டு ராணுவ தளபதிகள் பங்கேற்றிருந்த மாநாட்டில் பாதுகாப்பு எனும் அஜெண்டா உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.