சிறு போகத்தில் நெல் பயிரிடும் மக்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு அவசியமான இரசாயன அல்லது சேதனப் பசளையைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டு நிவாரணத்தை வவுச்சராக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு இணங்க இந்நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன்படி நெல் விவசாயம் மேற்கொள்ளும் ஒரு ஹெக்டயர் நிலத்திற்கு 20,000 ரூபா மற்றும் இரண்டு ஹெக்டயர்களுக்கு 40,000 ரூபா வீதம் மானிய நிதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை உர மானியத்திற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி 10பில்லியன் ரூபாவாகும். இந்நிதி உதவி வவுச்சராக ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சிறுபோக நெல் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் 6 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவிற்கு அசேதன அல்லது சேதனப் பசளையை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவ்வாறே விவசாய மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசாங்க உரக் கம்பனிகள் இரண்டு விநியோகிக்கும் இரசாயன மற்றும் சேதனப் பசளை அனைத்தும் கமநல சேவை மத்திய நிலையத்தினாலும், தனியார் பிரிவின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வுர மானிய வவுச்சரை உத்தியோகபூர்வமாக விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (22) விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் 25 விவசாயிகளுக்கு இந்த உர மானிய வவுச்சர்கள் வழங்கப்பட்டன.