உலகின் மிகப் பெரிய ‘இளம் திறமைத் தொழிற்சாலை’ இந்தியா: ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி: திறமைமிக்க இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார்.

மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களை சிட்னி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2014-ம் ஆண்டு நான் சிட்னி நகருக்கு வந்து உங்களைச் சந்தித்தேன். அப்போது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்னி வந்த முதல் இந்தியப் பிரதமராக நான் இருந்தேன். இந்தியப் பிரதமரை மீண்டும் நீங்கள் சிட்னியில் சந்திக்க 28 ஆண்டுகள் காத்திருக்கத் தேவை இருக்காது என்ற உறுதியை நான் அப்போது உங்களுக்கு அளித்தேன். அதன்படி, தற்போது உங்கள் முன் நான் இருக்கிறேன்.

இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் காமன்வெல்த், கிரிக்கெட், உணவு ஆகியவை இணைப்பதாக ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. எரிசக்தி, பொருளாதாரம், கல்வி ஆகியவை நம் இரு நாடுகளையும் இணைப்பதாக சிலர் சொல்வார்கள். இவை எல்லாவற்றையும் கடந்தது இந்திய – ஆஸ்திரேலிய உறவு என்பது எனது நம்பிக்கை. இது பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மேற்கொண்ட ராஜதந்திர உறவுகளால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையான காரணம், உண்மையான சக்தி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களாகிய நீங்கள்தான்.

சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் இந்திய உணவு வகைகளும் இனிப்பு வகைகளும் மிகவும் பிரசித்தம் என கேள்விப்பட்டேன். எனது நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீசை நீங்கள் அங்கே அழைத்துச் செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னர் கடந்த ஆண்டு இறந்தபோது நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துக்கமடைந்தோம். நெருக்கமான ஒருவரை இழந்துவிட்டதுபோன்ற துக்கம் அது.

உலகப் பொருளாதாரத்தின் ஒளிப்புள்ளியாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு யாராவது சவால் விடுகிறார்கள் என்றால், அது இந்தியாதான் என்று உலக வங்கி கூறியுள்ளது. பல நாடுகளில் வங்கி செயல்முறை சிக்கலில் உள்ளது. ஆனால், இந்திய வங்கிகள் வலிமை அடைந்து பாராட்டும்படியாக செயல்பட்டு வருகின்றன.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பெரும் நெருக்கடி வந்தபோதும், ஏற்றுமதியில் கடந்த ஆண்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் அந்நிய கையிருப்பு புதிய உச்சத்தில் உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நீங்கள் அறிவீர்கள். நிதித்துறையிலும் தொழில்நுட்ப புரட்சியை இந்தியா நிகழ்த்தி இருக்கிறது.

இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கை முறைக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால், யோகா நம்மை இணைக்கிறது. நீண்ட காலமாக கிரிக்கெட் நம்மை இணைத்து வருகிறது. இப்போது டென்னிஸும், திரைப்படங்களும் நம்மை இணைக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சியான Masterchef நிகழ்ச்சியும் தற்போது நம்மை இணைத்து வருகிறது.

இந்தியாவில் திறமைக்கும் வளங்களுக்கும் பஞ்சமே இல்லை. இன்று இந்தியா மிகப் பெரிய மற்றும் இளமையான திறமை தொழிற்சாலையாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் விரைவில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.