`கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள்..!' – அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி தலைமையில்‌ மாவட்ட அளவிலான அனைத்துத் துணை ஆணையர்‌கள் மற்றும்‌ உதவி ஆணையர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று சென்னை, தலைமைச்‌ செயலகத்தில் நடைபெற்றது.‌ இந்த ஆய்வுக் கூட்டத்தில்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌துறை முதன்மைச் செயலாளர்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌துறை ஆணையர்‌, மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள்‌ மற்றும்‌ உதவி ஆணையர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

டாஸ்மாக் மதுக்கடை

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொழிற்சாலைகளால்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌ மெத்தனால்‌, இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும்‌ தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறைகளுடன் பெறப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்‌. உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும்‌ தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதையும்‌, பெறப்படுகின்ற மூலப்பொருள்‌ எதை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும்‌ பயன்படுத்தப்படுகிறதா இல்லை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும்‌ கண்காணிக்க வேண்டும்.‌

மேலும்‌, டாஸ்மாக்‌ கடைகள்‌, எஃப்‌.எல்‌.2 உரிமம்‌ பெற்ற கிளப்‌, எஃப்‌.எல்‌.3 உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌, NDRC உரிமத்தலங்கள்‌ ஆகியவற்றைக் கண்காணித்து விதிமுறைகள்‌ ஏதேனும்‌ மீதி இருப்பின்‌, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ மாநில எல்லை மாவட்டங்களில்‌ தொடர்புடைய மாவட்ட கலால்‌ அலுவலர்கள்‌, கலால்‌ காவல்‌துறையினருடன்‌ ஒருங்கிணைந்து, காவல்‌ சோதனைச்சாவடிகள்‌ அமைத்து தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு, வெளிமாநில மதுபானம்‌ மற்றும்‌ கள்ளச்சாராயம்‌ ஆகியவற்றின்‌ விற்பனையை முற்றிலும்‌ தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

டாஸ்மாக் கடை

மதுபானக்‌ கடைகள்‌, மதுபானக் கூடங்கள்‌ டாஸ்மாக்‌ கடைகளுடன்‌ இணைக்கப்பட்டவை, மனமகிழ்‌ மன்றங்கள்‌ மற்றும்‌ ஹோட்டல்களுடன்‌ இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள்‌ அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள்ளாக மூடப்படுகின்றனவா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்‌. மதுவில்லா நாள்கள்‌ மற்றும்‌ அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருக்கும் நாள்களில்‌ கடைகள்‌ மூடப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கள ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்‌.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம்‌ மற்றும்‌ போதைப்‌பொருள்கள்‌ பயன்படுத்துதலைத் தடுத்தல்‌ மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை வாரம்தோறும்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ நடத்த வேண்டும்‌. மேலும்‌, அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம்‌ ஓட்டுவதால்‌ ஏற்படக்கூடிய தீமைகள்‌ குறித்தும்‌, போதை மருந்தை பயன்படுத்துவதால்‌ ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்தும்‌, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மது விற்பனை

இது தொடர்பாக மாவட்டம்தோறும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில்‌ விழிப்புணர்வுப்‌ பேரணி, முகாம்கள்‌, கருத்தரங்குகள்‌, தெரு நாடகங்கள்‌, சிறு நாடகங்கள்‌, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பொது இடங்களில்‌ விளம்பரம்‌ மற்றும்‌ துண்டுப்‌பிரசுரம்‌ விநியோகித்தல்‌, மனிதச் சங்கிலிப் பேரணி போன்றவற்றின் மூலம்‌ பிரசாரம்‌ மேற்கொள்ளுதல்‌ மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல்‌ ஆகியவற்றை நடத்த வேண்டுமென அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது‌” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.