சென்னை: கோடைகாலத்தில் மின் தேவையை சமாளிக்க, காற்றாலை மின்சாரத்தை கூடுதலாக வாங்கிப் பயன்படுத்த தமிழ்நாடு மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 2.67 மின் நுகர்வோர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில், விவசாயத்தின் பங்கு 2,500 மெகாவாட். கோடைகாலத்தில் தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும்.
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தினமும் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
மேலும், விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
இத்தகைய காரணங்களால், கடந்த 18-ம் தேதி மாநிலத்தின் மின் நுகர்வு 18,882 மெகாவாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இதனால் காற்றாலை மின்சாரத்தை கூடுதலாக வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தினசரி மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தற்போது மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் 5,055 மெகாவாட்டும், மின் வாரியத்தின் அனல் மின் நிலையங்களில் இருந்து 3,019 மெகாவாட்டும் பெறப்படுகிறது. இவை தவிர, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது. தற்போது காற்றாலை மின்சாரம் கூடுதலாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தினமும் 1,000 மெகாவாட் வாங்கப்படுகிறது. மே மாதம் முதல் நவம்பர் வரை காற்றாலை சீசன் ஆகும். அந்த சமயத்தில் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இந்த மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.