சித்தராமையா பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த தலைவர்கள்: 2024 மக்களவை தேர்தலுக்காவது ஒன்றிணைவார்களா?

புதுடெல்லி: கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக சித்தராமையா பதவியேற்ற விழா மேடையில் எதிர்க்கட்சிகள் 2018 இல் இருந்ததை விட குறைவாகவே காணப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், பாஜகவை எதிர்க்கும் இவர்கள் 2024 மக்களவை தேர்தலிலாவது ஒன்றிணைவார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2018 இல் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடகா முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார். இதன் விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். இதேபோன்ற ஒரு காட்சி காங்கிரஸ் முதல்வராக பதவி ஏற்ற சித்தராமையாவின் விழாவிலும் காண முடிந்தது.

ஆனால், சித்தராமையா பதவியேற்ற விழா மேடையில் எதிர்க்கட்சிகள் 2018 இல் இருந்ததை விட குறைவாகவே காணப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், பாஜகவை எதிர்க்கும் இவர்கள் 2024 மக்களவை தேர்தலிலாவது ஒன்றிணைவார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

இவ்விழாவில், பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி, பாரத் ராஷ்டிரிய சமிதியின் கே.சந்திரசேகர ராவ் ஆகிய முக்கியத் தலைவர்களை காண முடியவில்லை.

ஆளுக்கொரு காரணம் காட்டி வராமல் தவிர்த்தவர்கள் தம் சார்பில் ஒருவரை அனுப்பியிருந்தனர். இதர சில முதல்வர்களில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால், ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஸாவின் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் ஆகியோர் அழைக்கப்படவில்லை. ஏனெனில், டெல்லியுடன் பஞ்சாபிலும் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பறித்தது ஆம் ஆத்மி. ஆந்திரா, ஒடிஸாவில் பட்நாயக்கால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியால் ஆட்சியை இழந்தது.

எனினும், மத்தியில் தலைமை ஏற்று நடத்தும் பாஜகவை இந்தமுறை எப்பாடுபட்டாவது ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சி நடைபெறுகிறது. இப்பணியை பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் முன்னெடுத்து செய்கிறார். இவருக்கு உறுதுணையாக இருக்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. நிதிஷின் முயற்சிக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தமுறை ஆதரவளித்திருந்தனர்.

குறிப்பாக, காங்கிரஸுடன் கைகோர்க்கத் தயங்கியவர்கள், நிதிஷின் கோரிக்கையால் இறங்கி வந்தனர். இருப்பினும், கர்நாடகாவின் புதிய முதல்வர் சித்தராமைய்யாவின் பதவி ஏற்பில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இடம் பெற்றிருக்கவில்லை. இதனால், 2019 ஐ போலவே 2024 மக்களவை தேர்தலும் எதிர்க்கட்சிகள் வலுவடைவதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் கணிப்பு வேறாக உள்ளது.

இதன்படி, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் சுமார் 250 மக்களவை தொகுதிகளில் பாஜகவை நேரடியாக காங்கிரஸே எதிர்க்கிறது. இதர மாநிலங்களில் சுமார் 20 கட்சிகளுடன் காங்கிரஸ் மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைக்கும். இதில், ஜார்க்கண்ட், பிஹார், தமிழ்நாடு மற்றும் மகராஷ்டிராவில் காங்கிரஸ் ஏற்கெனவே ஆளும் கட்சியின் கூட்டணியாக உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஸா, மேற்குவங்கம் மாநிலங்களை ஆளும் கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்தவையே. எனவே, இவர்களுடன் மக்களவை தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்க முடியாது உள்ளிட்டவை காங்கிரஸின் திட்டமாக உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகா காங்கிரஸின் பொறுப்பாளர்களில் ஒருவருமான சுதர்ஸன நாச்சியப்பன் கூறும்போது, “மாநிலங்களை ஆளும் கட்சிகளை ஒரே அடியாக ஒழித்துக் கட்ட பாஜக விரும்புகிறது. இவை ஒழிந்தால் காங்கிரஸ் அழிந்துவிடும் என்பது அக்கட்சியின் எண்ணமாக உள்ளது. இதுபோல், மாநிலக் கட்சிகளை ஒழிக்க காங்கிரஸ் எப்போதும் நினைத்ததில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மக்களவைக்காக ஒரு ஒப்பந்தம் போடப்படும். இந்தமுறை புதியவகை அனுகுமுறையில் பாஜக மத்திய ஆட்சியிலிருந்து அகற்றப்படுவது உறுதி” எனத் தெரிவித்தார்.

மம்தாவின் ஆலோசனை: இந்தக் கூற்றை ஆமோதிக்கும் விதத்தில் மேற்குவங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவையுமான மம்தா, “எந்தெந்த மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளதோ அங்கு காங்கிரஸ் சிறிது விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையை கையாள வேண்டும்” என ஆலோசனை அளித்துள்ளார்.

இந்த உத்தியின் மூலம், தன் நேரடிப் போட்டியிலுள்ள ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மம்தாவின் ஆலோசனையை காங்கிரஸ் தலைமை ஏற்க அதன் தலைமையை சரிகட்டும் முயற்சியும் நடைபெறுகிறது.

இதுபோல், பாஜகவின் இதர எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுப்பதை பொறுத்தே 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.