ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 3 விண்கலம்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவின் சந்திரயான் திட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 2008ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற நிலையில், 2019ம் ஆண்டு சந்திரயான் 2ஐ இஸ்ரோ அனுப்பியது. அதில் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தவிரச் சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனிடையே இந்தியா சந்திரயான் 3 திட்டத்திற்கு ரெடியாகிவிட்டது.

இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3ஐ விண்ணில் செலுத்தும் இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. யுஆர் ராவ் மையத்தில் இப்போது படுவேகமாக இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

சந்திரயான்-3 ராக்கெட் நிலவின் நில அதிர்வு, அங்குள்ள பிளாஸ்மா சூழல், தனிம கலவை ஆகியவற்றை ஆராயும் கருவிகளைக் கொண்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான் 3 விண்கலம் ஜூலை மாதம் ஏவப்பட உள்ளது. இதற்கிடையே ஜூலை 12ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இஸ்ரோ தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இது குறித்து இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சந்திரயான் 3 தனது பயணத்தைத் தொடங்கலாம்.. இறுதி தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

சந்திரயான் 3 திட்டம் குறித்து சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “துல்லியமான தரையிறங்குவதாகுவதே சந்திரயான்-3இன் முதன்மை நோக்கம். அதற்குத் தேவையான கருவிகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்” என்று கூறியிருந்தார். சமீபத்தில் அதீத வெப்பத்தைத் தாங்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.