டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உயரதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட விவகாரங்களை மத்திய அரசு ஆளுநர் கட்டுப்பாட்டில் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்ச் நீதிமன்றம் சென்றதின் விளைவாக, நீதிமன்றம் அது மாநில அரசின் வரம்புக்குள் வருகிறது எனத் தீர்ப்பளித்தது. இதற்கிடையே மத்திய அரசு ‘தேசிய தலைநகா் சிவில் சர்வீஸ்’ ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசரச் சட்டம், உச்ச நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவா்களிடமும் ஆதரவு கோருவேன்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார், காங்கிரஸ் கட்சியினர், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அஜய் மாக்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதாரவளிப்பதின் சிக்கலைப் பட்டியலிட்டிருக்கிறார்.
அதில் அவர்,
நிர்வாகக் காரணங்கள்
“இந்தியாவின் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைகள் டெல்லியின் சூழலில் பொருந்தாது. டெல்லி யூனியன் பிரதேசம் மட்டுமல்ல; அது தேசிய தலைநகரம். அதனால் டெல்லி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தமானது. டெல்லிவாசிகள் இந்த நிலையிலிருந்து பயனடைவார்கள். மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு சேவைகளுக்காக சுமார் 37,500 கோடியை டெல்லிக்குச் செலவழிக்கிறது, இந்தச் சுமையை டெல்லி அரசு பகிர்ந்து கொள்வதில்லை. டெல்லியின் சிக்கலான நிர்வாகப் பிரச்னையைப் பற்றி பேசுகையில், பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையிலான குழு தனது அறிக்கையை அக்டோபர் 21, 1947 அன்று சமர்ப்பித்தது.
குறிப்பாக டெல்லியைப் பற்றி அந்த அறிக்கையில், ‘டெல்லியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் தலைநகரான இது ஒரு யூனியன் பிரதேச நிர்வாகத்தின்கீழ் இருக்க முடியாது. யுனைடெட் ஸ்டேட்ஸில், அரசின் இருக்கை தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதுபோல காங்கிரஸ் பிரத்யேக சட்டமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னுதாரணங்களிலிருந்து விலகுவதற்கான போதிய காரணங்கள் எதுவும் இல்லை. எனவே, இந்த மத்தியப் பகுதிகளை இந்திய அரசு தலைமை ஆணையர் அல்லது லெப்டினன்ட் கவர்னர் மூலமாகவோ அல்லது அண்டை மாநில ஆளுநர் மூலமாகவோ அல்லது ஆட்சியாளர் மூலமாகவோ நிர்வகிக்கலாம் என்று வரைவில் முன்மொழியப்பட்டிருக்கிறது.
பாபா சாஹேப்பின் கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நேரு, சர்தார் படேல் ஆகியோர் டெல்லியை தலைமை ஆணையரின் நிர்வாகத்தின்கீழ் மாநில அரசுகளின் பகுதி சி ஸ்டேட்ஸ் சட்டம், 1951-ன் கீழ் கொண்டுவந்தனர். இந்தச் சட்டத்தில் டெல்லிக்கு மட்டும் பிரத்யேகமான ஒரு சிறப்பு ஏற்பாடு இருந்தது. அதாவது, ‘டெல்லி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் அமைச்சர் அல்லது கவுன்சில் எடுக்கும் டெல்லியின் ஒவ்வொரு முடிவும் தலைமை ஆணையரின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
நிர்வாகம் தொடர்பாக முடிவெடுப்பதிலிருந்து அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இந்த துணைப் பிரிவிலுள்ள எதுவும் தலைமை ஆணையரைத் தடுப்பதாகக் கருதப்படாது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1956-ம் ஆண்டில், மாநில மறுசீரமைப்புக் குழுவின் (SRC) அறிக்கையை மதிப்பாய்வு செய்த நேரு, தற்போதுள்ள சட்டமன்றத்தை 1964-ல் முனிசிபல் கார்ப்பரேஷனாக மாற்றினார். பின்னர் 1965-ல் லால் பகதூர் சாஸ்திரி டெல்லிக்கு எந்த சட்டமன்ற அதிகாரமும் இல்லாத ஒரு பெருநகர சபையை வழங்கினார்.
1991-ம் ஆண்டில், நரசிம்ம ராவ் டெல்லிக்கான தற்போதைய ஆட்சி முறையை நிறுவினார், எல்.ஜி-க்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அனைத்து அதிகாரங்களையும் ‘வணிக விதிகளின் பரிவர்த்தனை’ மூலம் வழங்கினார். எனவே, சுதந்திரத்துக்குப் பிறகு எந்தப் பிரதமர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் மற்றும் பதவியில் வைக்கும் அதிகாரங்களை அனுமதிக்கவில்லை.
அரசியல் காரணங்கள்:
கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடுகிறார். இருப்பினும், அவரது கடந்தகால அரசியல் ஈடுபாடுகள் குறித்து சில கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது. அவரது கட்சி, பா.ஜ.க-வுடன் இணைந்து, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பா.ஜ.க-வுக்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார்.
அதனால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஐந்து ஆண்டுகளாக உரிமையற்றவர்களாக இருந்தனர். நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையை விசாரிப்பதற்கான பொதுநல மனுவை, தலைமை நீதிபதி ஏற்க மறுத்ததையடுத்து, பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையின்போது, கெஜ்ரிவால் பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்தார். சர்ச்சைக்குரிய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முதலில் அமல்படுத்தியவர் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கட்சியும் எதிர்க்கட்சிகளின் ராஜ்ய சபா துணைத் தலைவர் வேட்பாளரை எதிர்த்தது, அதற்குப் பதிலாக பா.ஜ.க ஆதரவு வேட்பாளரை ஆதரித்தது. குஜராத், கோவா, இமாச்சல், அஸ்ஸாம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு கெஜ்ரிவால் ஆதரவு அளித்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார். சமீபத்திய கர்நாடகா தேர்தல் தொடர்பாக கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியது, காங்கிரஸ் முதன்மை எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் இவ்வாறு நடந்துக்கொள்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
சட்ட காரணம்:
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் 95-வது பிரிவு, சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசை அனுமதிக்கிறது. கெஜ்ரிவாலை ஆதரிப்பவர்கள் மற்றும் அவசரச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், அடிப்படையில் நேரு, அம்பேத்கர், சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்ம ராவ் ஆகியோரின் அறிவுக்கும் முடிவுகளுக்கும் எதிரான முடிவை எடுக்கிறார்கள் எனப் பொருள்.
இதற்கு முந்தைய டெல்லி முதல்வர்கள் அனைவரும் எந்த சலசலப்புமின்றி தங்கள் பணிகளைச் செய்து முடித்தார்கள் என்றால், இப்போது கெஜ்ரிவால் ஏன் குழப்பத்தைக் கிளறுகிறார்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.