சென்னை: 9 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்திறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை வழியனுப்பி வைக்க வந்தவர்களை சந்திப்பதற்காக வெயிலில் நின்றார்.
இதை அருகிலிருந்து கவனித்த திமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான அன்பகம் கலை, பக்கத்திலிருந்த நிழலை கை காட்டி அங்கே நிற்கலாம் என ஸ்டாலினை அக்கறையோடு அழைத்துச் சென்றார்.
அதன்பிறகு சற்று தள்ளி நிழலில் நின்ற முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை வழியனுப்பி வைக்க வந்தவர்களை வரிசையாக சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார்.
வழக்கமான வேட்டி சட்டையை தவிர்த்து பேண்ட் -ஷர்ட் என கேசுவலான ஆடை அணிந்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் கூலிங் கிளாஸ் அணியவும் அவர் தவறவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொழில்துறை செயலாளர், செய்தித்துறை இயக்குநர், முதலமைச்சரின் முதன்மை செயலாளர்களில் அனுஜார்ஜ் மற்றும் உமாநாத் ஆகிய இருவரும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களை முதல்வர் இன்று சந்திக்க உள்ளார்.