"நானும் வழியனுப்ப வரலாம்மா தலைவரே…" – தழுதழுத்த நாசர்; வரச்சொன்ன ஸ்டாலின்!

ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களில், முன்னாள் அமைச்சர் நாசரும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பலரின் புருவத்தையும் உயர்த்தியது.

வாழ்த்து தெரிவித்த நாசர்

சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆவின் நிர்வாகத்தில் சீர்கேடு, தன் மகன் ஆசிம்ராஜா மீதான புகார்கள், தன் ஆதரவாளரான பூந்தமல்லி கமலேஷின் அடாவடி அரசியல் என பலதரப்பட்ட புகார்களில் சிக்கி பதவியை இழந்தார் நாசர். அவர்மீது முதல்வர் கடும் கோபத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் பரபரத்தன. தன்னுடைய நீண்டகால நண்பரான நாசரையே முதல்வர் தூக்கி எறிந்ததால், அமைச்சரவைக்குள்ளும் அதிர்வலைகள் கிளம்பின. இந்தச் சூழலில்தான், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நாசர்.

இந்தச் சந்திப்பு குறித்து ஆவடி மாநகர தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நாசர் மீது முதல்வருக்கு வருத்தம் இருந்தது உண்மைதான். அமைச்சர் பதவியைப் பறிப்பதற்கு முன்பாகக்கூட, நாசரை நேரில் அழைத்துப் பேசினார் முதல்வர். சில விஷயங்களைக் குறிப்பிட்டுக் கண்டித்தார். அப்போது, தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவெல்லாம் நாசருக்கு முடிந்து போயிருந்தது. பதவி பறிபோனவுடன், வீட்டிலேயே இருக்க விரும்பவில்லை நாசர். கட்சிக்காரர்கள் துக்கம் விசாரிப்பார்கள் என்பதாலேயே, குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டார். முதல்வர் வெளிநாடு கிளம்பும் தேதி நெருங்கியவுடன்தான் சென்னை திரும்பினார். மே 23-ம் தேதி காலை முதல்வர் வீட்டுக்கு போன் போட்ட நாசர், ‘வழியனுப்ப நானும் வரலாமா தலைவரே…’ என தழுதழுத்தவுடன், முதல்வருக்கும் மறுப்பு சொல்ல மனம் வரவில்லை. விமான நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டார்.

வாழ்த்து தெரிவித்த நாசர்

விமான நிலையத்தில், முதல்வருக்கு வேட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் நாசர். அவருக்குக் கைக்கொடுத்த முதல்வர், ‘எப்படிய்யா இருக்க… பழசையெல்லாம் நெனைச்சுட்டு இருக்காம கட்சி வேலையைப் பாரு’ எனச் சொல்லி, தோளில் தட்டிக் கொடுத்தார். முதல்வரின் கரிசனத்தை நாசர் மட்டுமல்ல, நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பதவி பறிபோன பரிதவிப்பில் இருந்தவருக்கு, முதல்வரின் வார்த்தைகள் ஆறுதல் அளித்திருக்கின்றன. மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவிகிடைக்குமா என்பது தெரியாது. ஆனால், இப்போதைக்கு முதல்வரின் கரிசனப் பார்வைக் கிடைத்திருப்பதே பெரிய விஷயம்தான்” என்றனர்.

அமைச்சர் பதவியிலிருந்து நாசரை நீக்கிய பிறகு, அவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை விவரங்களை கேட்டாராம் முதல்வர். “இதுவரை ஒன்றரை லட்சம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறார் நாசர்” எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். அதன்பிறகுதான் நாசர் மீதான கோபம் முதல்வருக்கு தணிந்தது என்கிறது தி.மு.க வட்டாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.