சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 9 வட்டங்களில் காலியாக உள்ள 57 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் அறிவிப்பாணை வெளியிட்டனர். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் மொத்தம் உள்ள 57 காலி பணியிடங்களுக்கு 4,048 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் 3,033 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் பலரின் விண்ணப்பங்கள் காரணம் கூட சொல்லாமல் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் 2,025 பேர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பாமல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கிடப்பில் போட்டார்.
மற்ற மாவட்டங்களுக்கான கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களாக நிரப்பப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஜமாபந்தி தொடங்கியுள்ளதால் கிராம உதவியாளர்கள் இல்லாத வருவாய் கிராமங்களில் கிராம கணக்குகளை தாக்கல் செய்வதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ஆஷா அஜித் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.