'பாஜக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி' – நிதிஷ் குமாரின் வியூகம் வெல்லுமா?!

எதிர்கட்சிகள் ஒன்றிணைப்பு:

வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க-வை வீழ்த்தி வெற்றி கனியை ருசிக்க பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் வியூகம் வகுத்து இருக்கிறார். இதன் ஒருபகுதியாக அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் இறங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்தார்.

மல்லிகார்ஜூன கார்கே.

பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார். இதில் மம்தா பானர்ஜி மட்டும் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார்.

முடிவை மாற்றிக்கொண்ட மம்தா:

இதற்கிடையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. இதையடுத்து மம்தா தனது முடிவை மாற்றியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மம்தா, “காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அந்த இடங்களில் காங்கிரஸை தமது கட்சி ஆதரிக்கும். பிராந்திய கட்சிகள் எங்கெல்லாம் வலுவாக இருக்கின்றனவோ, அந்த இடங்களில் பிராந்திய கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி

முன்னதாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக மம்தா விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸின் இந்த வெற்றி மம்தாவுக்கு மட்டும் இல்லாமல் பிற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக-வை எதிர்ப்பதற்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இதில் நிதீஷ் குமாரும் அடங்குவார். இதையடுத்து அவர் தனது எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மேலும் வேகமாக மேற்கொண்டுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக ஓரணி:

இதன் ஒருபகுதியாக அவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தார். முன்னதாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம், அதிகாரம் ஆகியவற்றில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு தேசியத்தலைநகர் பணியாளர் குடிமைப்பணிகள் ஆணையம் அமைக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதனால் கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற நிதீஷ் குமார், கெஜ்ரிவால் அரசுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வெற்றி பெற வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான செமி-ஃபைனல்:

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களுடனும் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வேன். கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறேன்.

பாஜக

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறேன். அவர்களிடம் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என நிதிஷ்குமாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த மசோதா மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டு விட்டால், அது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும் என்ற செய்தியை விடுக்கும். இதுதான் மக்களவைத் தேர்தலுக்கான செமி-ஃபைனல்” என்றார்.

வியப்பைத் தருகிறது:

பிறகு நிதிஷ் குமார் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி செய்ய முடியும்?. கெஜ்ரிவால் சொல்வது சரி. நாங்கள் அவருடன் முழுமையாக இருக்கிறோம். அவர் டெல்லியில் நன்றாக பணியாற்றுகிறார்.

மோடி – அமித்ஷா

ஆனால் அவரது அரசை செயல்பட விடாமல் தடுப்பது வியப்பைத் தருகிறது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். அவசர சட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் பேசுவேன். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதை யாரும் எதிர்ப்பார்கள் என்று நான் கருதவில்லை” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்:

இதனை தொடர்ந்து நேற்று முந்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாட்னாவில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. எப்போது, எங்கு நடக்கும் என்ற அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில் ஏராளமான தலைவர்கள் பங்கேற்பர்” என்றார். இந்த சந்திப்புக்கு பிறகு தனது ட்விட்டரில் பக்கத்தில் கார்கே, “இனி நாடு ஒன்றுபடும்” என குறிப்பிட்டுள்ளார்.

“ஒருங்கிணைப்பை பறைசாற்றும் வகையில்…”

முன்னதாக கர்நாடக முதல்வராக சித்தராமையா கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை பறைசாற்றும் வகையில், நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின்

நிதீஷ் குமார் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். எனவே இவ்வாறு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நிதீஷ் குமாரின் வியூகம் வெல்லுமா என்ற கேள்வி எழுகிறது.

சாத்தியம் இல்லை:

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா. “2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின், மம்தா, நிதிஷ் குமார் என ஒவ்வொருவரும் தனித்தனியாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய ஒரே இலக்கு மோடி அரசை அகற்ற வேண்டும் என்பது தான். இந்தியாவை பொறுத்தவை பிரதான கட்சிகள் என்றால் அது காங்கிரஸ், பாஜக தான். இதில் காங்கிரஸ் ஒரு சரியான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் இருக்கிறது.

துரை கருணா

பல மாநிலங்களில் கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைய மாநில கட்சிகள் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி அதிக இடங்களை பெரும் முயற்சியில் தான் இருப்பார்கள். எனவே இந்த ஒருங்கிணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்பது போல் தான் தெரிகிறது. மக்கள் மத்தியிலும் ஆதரவு குறைவாக தான் இருக்கிறது. மறுபுறம் இந்துத்துவா உணர்வு மக்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. ராமர் கோவில் கட்டி முடித்துவிட்டார்கள் என்றால் பாஜகவுக்கு மேலும் ஆதரவு அதிகரிக்கும். மதசார்பற்ற கூட்டணியில் யாரை முன்னிலை படுத்துவது என்பதில் தான் பிரச்னை இருக்கிறது” என்றார்.

`ஈகோ இருக்கிறது’

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். “அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் ஈகோ இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் போட்டியிடக்கூடாது என்று மம்தா சொல்கிறார். உ.பி முழுவது நான் தான் போட்டியிடுவேன் என அகிலேஷ் யாதவ் கூறுகிறார். இதையெல்லாம் காங்கிரஸ் எப்படி ஏற்றுக்கொள்ளும். எனவே காங்கிரஸுக்கும் சில இடங்களில் சீட்டுக்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.

ப்ரியன்

அப்போது தான் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க முடியும். கர்நாடக நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ், மம்தா, கெஜ்ரிவால் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது கெஜ்ரிவாலுக்கு அவசியம் வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொல்லியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்வதற்கான பவரை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. இந்த சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் செய்ய வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் 103 உறுப்பினர்களும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். ஏற்கெனவே அதானி விஷயத்தில் ஒன்றாக இருந்தார்கள். இதில் ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக கார்கே:

மேலும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். அங்கிருக்கும் கவர்னர்களும் கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இவை இரண்டும் தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஈகோவை போக்க தான் நிதீஷ் குமார் முயற்சித்து வருகிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

அவருக்கு பிரதமர் பதவியின் மீது ஆசை இல்லை என்று தெரிவித்துவிட்டார். ராகுல் பிரதமர் என்றால், மம்தா விரும்பம் தெரிவிக்க மாட்டார். எனவே கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம் வைத்திருக்கிறார்கள். பட்டியல் இனத்தை சேர்ந்தவர் எனபதால் 25% வாக்குகள் எளிதாக கிடைக்கும். இதெல்லாம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பது போக, போக தான் தெரியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.