இளையான்குடி: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் போலீஸார் பார்வையாளராக மாறிய நிலையில், கட்டுப்பாடின்றி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளாமல் போலீஸார் பார்வையாளர்களாக மேடையில் அமர்ந்து கொண்டனர். இதனால் கட்டுப்பாடின்றி காளைகள் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டை பாதியில் டிஎஸ்பி நிறுத்தினார்.
அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயில் திருவிழாவையெட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்திருந்தன.
ஜல்லிக்கட்டை காலை 9.30 மணிக்கு தமிழரசி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், பார்வையாளராக மாறி, மேடையில் அமர்ந்து கொண்டனர். விழாக் குழுவினர் பலமுறை கேட்டு கொண்டும் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் மேடையிலேயே அமர்ந்து கொண்டனர். இதனிடையே திடீரென கட்டுப்பாடின்றி காளைகளை மைதானத்துக்கு வெளிப்புறமாக ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டன.
பல காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்தன. சில காளைகள் அன்னதானம் நடைபெற்ற பகுதிக்குள்ளும் சென்றது. இதனிடையே, அங்கு வந்த சிவகங்கை டிஎஸ்பி சிபி சாய்சவுந்தரியன் போட்டியை பாதியில் பிற்பகல் 1 மணிக்கே நிறுத்தினார். இதனால் காளைகளை அவிழ்க்க முடியாத, அதன் உரிமையாளர்களும், பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
முன்னதாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 120 காளைகள் வரை அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளிகாசு, பீரோ, கட்டில், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடு முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்து பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.