பிரியாணியில் கருத்தடை மாத்திரை.. கோவையில் தீயாக பரவிய வதந்தி.. தட்டித்தூக்கிய போலீஸார்!

கோவை:
பிரியாணியில் கருத்ததடை மாத்திரையை கலப்பதாக கோவையில் வேண்டுமென்ற வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து இந்த வதந்தி பரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எத்தனை உணவுகள் விதவிதமாக வந்தாலும் இந்தியர்கள் மத்தியில் பிரியாணிக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. உண்மையில், ஈரானில் கண்டுபிடிக்க உணவாகவே பிரியாணி கருதப்படுகிறது. பின்னர் முகலாய மன்னர்களின் ராஜ உணவாக பிரியாணி இருந்துள்ளது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பிரியாணி உணவின் செய்முறை கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து தற்போது இந்தியாவின் தேசிய உணவு என்பது போலவே மாறிவிட்டது.

எந்த விசேஷமாக இருந்தாலும் அங்கு முதலிடத்தில் இருப்பது பிரியாணி தான் என்ற நிலை வந்துவிட்டது. இந்த சூழலில், பிரியாணிக்கு ஒரு கும்பல் மத சாயத்தை பூச முயற்சித்து வருகின்றனர். அதாவது, பிரியாணி இஸ்லாமியர்களுக்கான உணவு என்றும் அதை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்களின் குரல் எடுபடவில்லை.

இதையடுத்து, பிரியாணியை வைத்து மக்களை அச்சுறுத்தும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தயாரிக்கும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும், அது இந்து ஆண்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் கோவையில் கடந்த சில நாட்களாக பயங்கர வதந்தி பரவி வந்தது. அதாவது இந்துக்களின் மக்கள்தொகையை குறைக்க இவ்வாறு சதி நடப்பதாக சிலர் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தொடர்ந்து வதந்தி பரப்பினர்.

இது கோவை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற வதந்தி தமிழகம் முழுவதும் பரவியது. பின்னர் போலீஸார் இதுதொடர்பாக விசாரித்ததில் அதில் துளியும் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது கோவையை டார்கெட் செய்து இதுபோன்ற வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, எந்தவித ஆதாரமும் இல்லாமல் இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பிய 9 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.