புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு தேசிய அபிவிருத்திக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும், இரண்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட செயற்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்தின் முறையான அனுமதியின்றி இடைநிறுத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில திட்டங்கள் பாரிய பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன. உதாரணமாக மகாவலி திட்டம் விவசாயத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. சில திட்டங்கள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஜப்பானுடனான இலகு ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் இவ்வாறான திட்டங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இவ்வாறான திட்டங்களை இடைநிறுத்தக் கூடாது எனறும் ஜனாதிபதி நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந் நாட்டில் முதலீடு செய்வதற்கு, எமது நாட்டின் மீது அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டால், அதை ஒரே இரவில் மாற்ற முடியாது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளை அனுமதியின்றி மாற்ற முடியாது.
வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாக்கும் வகையில், சர்வதேச நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.