மாநிலம் முழுவதும் நீர்நிலை மீட்புத் திட்ட வரைவு; சீமானின் ஐடியா.. கேட்குமா திமுக அரசு..?

தமிழகத்தில் சீரழிந்து வரும் நீர்நிலைகளை மீட்க திட்ட வரைவை தயார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

கடந்த 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி கிராமத்தின் ஏரியில் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதந்தன. ஏரிக்கு அருகே செயற்பட்டு வரும் இரத்தினம் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியல் பொருட்கள் கலந்த கழிவு நீரே இதற்குக் காரணம்.

வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீரினை முறையாக சுத்திகரிக்காமல் மறுசுழற்சி வினைகளுக்கு உட்படுத்தாமல் நேரடியாக நீர்நிலைகளில் விடும் தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகள்‌ மிகுந்த கண்டனத்திற்குரியது. வேதிப்பொருள் கலந்து அங்குள்ள ஏரி நச்சுத்தன்மைக் கூடியதாக மாற்றப்பட்டிருப்பதனை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த ஏரியே நீர் ஆதாரமாக இருக்கும் நிலையில் தற்போது நச்சுத்தன்மைக்கொண்டு பயன்படுத்த இயலாத நிலைக்கு மாறி இருப்பது பொதுமக்களுக்கும், ஏரியை நம்பி இருக்கும் தொழில்களுக்கும், பல்வேறு உயிர்களுக்கும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து இது தொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டப் பிறகும் அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வேதிப்பொருள் கலந்து நீர்நிலையை மாசுபடுத்தி, பெரும் அளவில் மீன்கள் இறப்பதற்குக் காரணமான தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இதுவரை அந்த நீரைப் பயன்படுத்தியதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளித்திடவும் வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு எவ்வளவு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது என்பதற்கு கரியம்பட்டி ஏரியின் தற்போதைய நிலை ஒரு எடுத்துக்காட்டு.

அரசுக் கட்டுமானங்கள், தனியார் ஆக்கிரமிப்புகள் எனப் பல்வேறு‌ காரணங்களால் நீர்நிலைகளின் பரப்பு தமிழ்நாடெங்கும்‌ குறுகிவரும் நிலையில் எஞ்சியிருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவும் வளர்க்கவும் திட்டமிடாதிருப்பது, திமுக அரசானது தமிழர் நிலத்தின் வளம் மீதும் மக்களின் நலம் மீதும் கொண்டிருக்கின்ற அக்கறையின்மையைக் காட்டுகிறது‌‌.

இதேபோன்று, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கப்பட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுமைக்குமான நீர்நிலை மீட்புத் திட்ட வரைவு ஒன்றினை அரசு தயார் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதன் வழி நீர்நிலைகளைக் காத்திடவும், அதனை நம்பி வாழும் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும் வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.