சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன் மறைந்த செய்தியால் அதி்ர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது தந்தை காலத்தில் இருந்தே கழகத்தின் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்பார். தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநராகப் பொறுப்பு வகித்துப் பல ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்த மனிதநேயப் பண்பாளர்.
2006-இல் கழக ஆட்சி அமைந்ததும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர்க் குழுத் தலைவராக கருமுத்து கண்ணன் நியமிக்கப்பட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தக்காராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, கோயில் புனரமைப்புப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
கருணாநிதியால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு – மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர். நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன்- எனது தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியவர்.
தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணன் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.