முக்குலத்தோர் கோட்டையில் எடப்பாடி கொடி.. அனல் பறக்கும் தென் மாவட்டங்கள்.. களமிறங்கும் புதிய மா.செ.க்கள்!

சென்னை:
அதிமுகவின் முக்குலத்தோர் வாக்குவங்கியில் அடுத்தடுத்து ஓட்டைகள் விழுந்த நிலையில், அதனை சரிசெய்ய முழு மூச்சாக எடப்பாடி பொதுச்செயலாளர் களம் இறங்கியிருக்கிறார். அந்த வகையில் தென் மாவட்டங்களை குறிவைத்து மிகப்பெரிய ஆபரேஷனை நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, தென் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக நியமிக்கப்படவுள்ளனர்.

அதிமுகவின் பெரிய பலமே அதன் சாதி வாக்குவங்கி தான். வடக்கே வன்னியர்கள், மேற்கே கவுண்டர்கள், தெற்கே முக்குலத்தோர் என்ற பலமான வாக்கு வங்கியை எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு இருந்து வருகிறது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வந்த எடப்பாடி பழனிசாமியின் பிரவேசம் அதிமுகவின் முகத்தையே மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

தெரிந்தோ தெரியாமலோ எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் கொங்கு சமூகத்தினரின் கையே ஓங்கி இருந்தது. தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் என கொங்கு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களே அதிமுகவில் கோலோச்சினர். வன்னியர் சமூகத் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில், முக்குலத்தோர் சமூகத்தினர் ஓரங்கப்பட்டனர்.

முக்குலத்தோர் கோபம்:
இதன் உச்சக்கட்டமாக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்தே தூக்கியெறியப்பட்டனர். இது முக்குலத்தோர் சமூகத்தினரிடம்

க்கு எதிரான மனநிலையை உருவாக்கி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. எடப்பாடி மீதான அவர்களின் கோபம் அதிமுகவின் மீதான கோபமாக மாறியுள்ளது. முக்குலத்தோர் வாக்குகள் இல்லாமல் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது என்ற கள யதார்த்தத்தை எடப்பாடி பழனிசாமி லேட்டாக தான் புரிந்துகொண்டுள்ளார்.

ஆபரேஷன் டெல்டா:
அதுவும் ஓபிஎஸ் – தினகரன் இணைப்பு அவருக்கு மிகுந்த பதற்றத்தை கொடுத்துள்ளதாக கட்சியின் சீனியர்களே தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ் – தினகரன் இணைப்பால் சிதறிகிடந்த முக்குலத்தோர் வாக்குகளை அவர்கள் இருவரும் அப்படியே அறுவடை செய்துவிடுவார்கள் என்பதே அவரது பதற்றத்துக்கு காரணம். இதன் காரணமாகவே, சமீபகாலமாக முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதன் முதல்கட்டமாக தான், முக்குலத்தோர் பெருமளவில் காணப்படும் டெல்டாவை டார்கெட் செய்து தஞ்சையில் பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார் எடப்பாடி.

மசியாத வைத்திலிங்கம்:
ஓபிஎஸ்ஸின் வலதுகரமாக இருப்பவரும், டெல்டாவில் பெரும் செல்வாக்கு பெற்றவருமான வைத்திலிங்கத்தை தன் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்றார் எடப்பாடி. ஆனால் வைத்திலிங்கம் மசியவில்லை. இதனால் மற்றொரு ஓபிஎஸ் ஆதரவாளரான காமராஜை தன் பக்கம் எடப்பாடி இழுத்துக் கொண்டார். டெல்டாவில் முக்குலத்தோர் சமூகத்தினரின் பெரும் ஆதரவு காமராஜுக்கும் இருக்கிறது. இதனால் டெல்டாவில் ஓரளவுக்கு முக்குலத்தோர் வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது எடப்பாடியின் கணக்காக இருக்கிறது.

டார்கெட் சவுத்:
இந்நிலையிதான், மறவர், கள்ளர், அகமுடையார் என முக்குலத்தின் மூன்று பிரிவினரும் பெருமளவில் வியாபித்து இருக்கும் தென் மாவட்டங்களை குறிவைக்க தொடங்கியுள்ளது எடப்பாடி டீம். அங்கு ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களை இழுப்பதற்கான முயற்சிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒருகட்டமாக, தென் மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.

புதிய மா.செக்கள்:
அதன் ஒருகட்டமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளை வடக்கு மாவட்டமாகவும், மீதமுள்ள கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை தெற்கு மாவட்டமாகவும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் எடப்பாடி முடிவு செய்திருக்கிறார்.

யார் – யார்..?
இதில் வடக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியையும், தெற்கு மாவட்டத்திற்கு கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளியையும் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்குலத்தோர் வாக்குகளை மட்டுமல்லாமல் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே ராஜலட்சுமியை புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அடுத்தடுத்து எடப்பாடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.