திருமலை: கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமி தரிசனம் செய்ய சாதாரண நாட்களில் 18 முதல் 24 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 36 மணி நேரத்துக்கும் மேலாகிறது.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவஸ்தானத்தினர் விஐபி சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சுவாமியை தரிசனம் செய்ய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளி பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமான இலவச டிக்கெட்டுகள் விற்பனை தேவஸ்தான இணையத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
இதேபோல், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சுவாமியை ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் நாளை 24-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது.
28-ம் தேதி சிறப்பு கலசாபிஷேகம்: கி.மு 614ம் ஆண்டு, பல்லவ மகாராணி சாமவை பெருந்தேவியார், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 18 அங்குலம் உயரமுள்ள வெள்ளி போக ஸ்ரீநிவாச மூர்த்தியை காணிக்கையாக வழங்கினார். இவரை மணவாள பெருமாள் என்று தமிழில் அழைக்கின்றனர். இவருக்கு அரை நூற்றாண்டாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் குறிப்பிட்ட நாளில் சிறப்பு கலசாபிஷேகம் செய்து வருகின்றனர்.
இந்த கலசாபிஷேகம் வரும் 28ம் தேதி ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள தங்க கதவுகளின் அருகே வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.