கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சி நோக்கிச் செல்லும் போது அவற்றை மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உறுப்பினர்களால் நீண்டகாலமாக கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பது நியாயமானதா என பிரதமர் தினேஷ் குணவர்தன மேல் மாகாண கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் அரச அதிகாரிகள் அதற்கேற்ப செயற்பட வேண்டும் எனவும், மேல்மாகாண கூட்டுறவு சட்டம் பலமானதாக இல்லை எனத் தெரியவந்திருப்பதால் அதனை மாற்றுவதற்கான ஆரம்ப வரைவை உடனடியாக தனக்குக் கிடைக்கச் செய்யுமாறும் அவர் மேல்மாகாண ஆளுநர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான காலங்களில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கூட்டுறவு இயக்கம் பெரும் சேவையை ஆற்றுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.
மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான உடனடித் தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“கூட்டுறவுச் சங்கங்களில் நீண்டகாலமாக கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்கள், பல்வேறு நபர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் உள்ளன. கிழக்கு ஹேவாகம் கோரளைச் சங்கத்தின் சொத்துக்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அது சட்டப்படி நடக்க வேண்டும் என்றாலும் இந்த கூட்டுறவு சங்கங்கள் உடைந்து விழும் வரை, அவற்றை கட்டியெழுப்புவதற்கான வழிவகை குறித்து ஆராயாது, சொத்துக்களை இழப்பதற்கு வழி செய்வது நியாயமானதா?, மறுபுறம், கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடக்கும் வரை, நிர்வாகத்திற்காக நியமிக்கப்படும் குழுவில், அரச அதிகாரிகளை மட்டுமன்றி, துறைசார்ந்தவர்களையும் நியமிக்கும் முறை தேவை. மறுபுறம், பணிப்பாளர் சபையிலிருந்து குற்றம் சாட்டப்பட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த நபர் மீண்டும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வாய்ப்பில்லை. மேன்முறையீடு செய்யவும் இடமில்லை. இது அடிப்படை உரிமை மீறலாகும். மேல் மாகாண கூட்டுறவு சட்டத்தில் உள்ள பலவீனம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு இயக்கம் வலுப்பெறாது. இனி, இந்தப் பிரச்னைகளை, பாராளுமன்ற பொது மனுக்கள் குழுவுக்கு அனுப்பினால், மனுதாரருக்கு மட்டுமின்றி, அநீதி இழைத்த அதிகாரிகள் மீதும் முடிவு எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சட்டமா அதிபரைத் தொடர்பு கொண்டு இந்த சட்டப் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நடைமுறை தீர்வுகளைப் பெறுமாறு மாகாண சபையில் உள்ள சட்ட அதிகாரிக்கு ஆலோசனை வழங்குங்கள்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகள் குறித்து கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு மேலதிகமாக, பெறுமதியான சொத்துக்கள் அழிவதைத் தடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் கூட்டுறவு நுகர்வோர் துறைகளை பராமரிக்க சதொச போன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, கோகிலா குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, மேல்மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, மேல் மாகாண வீதிகள், போக்குவரத்து மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சம்பா என் பெரேரா, மேல்மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆர்.ஏ.விஜயவிக்ரம, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் , எம்.ஏ.பி.ஜயக்கொடி, மற்றும் கொழும்பு – கம்பஹா – களுத்துறை மாவட்டங்களின் உதவி கூட்டுறவு ஆணையாளர்கள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.