புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கரிமா லோஹியா இரண்டாவது இடமும், உமா ஹாரதி.என், ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களை மயூர் ஹசாரிகா, கஹானா நவ்யா ஜேம்ஸ், வசீம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பிடித்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்தது. நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டன. 933 பேர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்கள் அவர்களது தரவரிசையின்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் ஏ, பி, பணிகளில் அமர்த்தப்படுவர். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) – முக்கிய அம்சங்கள்
- குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5-ம்நாள் நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில், 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
- 2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 13,090 பேர் தகுதி பெற்றனர்.
- மொத்தம் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
- பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேரை (ஆடவர் 613, மகளிர் 320) ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
- இறுதியாக தகுதி பெற்றவர்களின் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர்.
- இஷிதா கிஷோர் முதலிடம் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
- கரீமா லோஹியா 2-ம் இடம் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
- உமா ஹரதி 3-ம் இடம் பெற்றுள்ளார். ஐதராபாத் ஐஐடி-யில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்
- செல்வி ஸ்மிர்தி மிஷ்ரா 4-ம் இடம் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
- தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் மகளிர், 11 பேர் ஆடவர்.
இடஒதுக்கீடு விவரம்:
1) இந்திய ஆட்சிப் பணி
2) இந்திய வெளியுறவுப் பணி
3) இந்திய காவல் பணி மற்றும்
4) மத்தியப் பணிகள், குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ மொத்தம் 933 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொதுப்பிரிவினர் 345 பேர், இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 99 பேர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 263 பேர். ஷெட்யூல்டு வகுப்பினர் 154 பேர், ஷெட்யூல்டு பழங்குடியினர் 72 பேர். இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேரும், இந்திய வெளியுறவுப் பணிக்கு 38 பேரும் இந்திய காவல் பணிக்கு 200 பேரும், மத்திய அரசின் குரூப் ‘ஏ’ பணிக்கு 473 பேரும், குரூப் ‘பி’ பணிக்கு 131 பேரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.