சிட்னி,
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று மாலை சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர்.
அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசம் வாய்ந்த பகுதியாக சர்வதேச நிதியகம் இன்று கருதுகிறது.
உலகளாவிய சிக்கலுக்கு யாரேனும் சவால் விடுகிறார்களா? என்றால் அது இந்தியாவே என உலக வங்கி நம்புகிறது. பல்வேறு நாடுகளில் வங்கி நடைமுறை இன்று சிக்கலில் உள்ளது. ஆனால், மறுபுறம் இந்திய வங்கிகளின் வலிமை ஒவ்வொரு பகுதியிலும் பாராட்டப்படுகிறது என கூறியுள்ளார்.
நமது வாழ்க்கை முறை வேறுபட்டு இருக்கலாம். ஆனால், யோகாவும் கூட நம்மை இணைக்கிறது. நீண்டகாலத்திற்கு கிரிக்கெட் விளையாட்டால் நாம் இணைக்கப்பட்டு இருக்கிறோம்.
ஆனால் தற்போது டென்னிஸ் விளையாட்டு மற்றும் திரைப்படங்களும் கூட நம்மை இணைக்கிறது. வெவ்வேறு விதங்களில் நாம் உணவை தயாரிக்கலாம். ஆனால், மாஸ்டர்செப் தற்போது நம்மை இணைக்கிறது என அவர் பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய அந்தோணி அல்பானிஸ் இருவரும் கூடியிருந்த மக்களை அருகே சென்று சந்தித்தனர். அப்போது, இரு தலைவர்களுடனும் அவர்கள் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்தும், கைகுலுக்கியும் கொண்டனர்.