ராகுல் காந்தியின் பின்னிரவு லாரி சவாரி: ஓட்டுநர்களின் பிரச்சினைகளை அறிய டெல்லி – சண்டிகர் பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பின்னரவில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து ஆம்லா சென்ற லாரி ஓட்டுநர்களுக்கு எல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களைக் கடந்து சென்ற, அவர்கள் கடந்து சென்ற லாரி ஒன்றில் ராகுல் காந்தி ஓட்டுநருக்கு அருகில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்தார். லாரி ஓட்டுநர்களின் பிரச்சினைகள் அறியவும், அவர்களின் மனதின் குரலைக் கேட்கவும் டெல்லியிலிருந்து சண்டிகர் வரை ராகுல் காந்தி இந்தப் பின்னிரவு பயணத்தை மேற்கொண்டார்.

இதுகுறித்த வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “ராகுல் காந்தி லாரி டிரைவர்களுடன் பயணித்து, அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டார். அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு பயணம் செய்தார். ஊடகங்களின் தகவல்படி, இந்திய சாலைகளில் சுமார் 9 லட்சம் லாரி டிரைவர்கள் பயணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கும் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் மனதின் குரலை கேட்கும் வேலையை ராகுல் காந்தி செய்தார்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல் அவர் லாரியினுள் இருக்கும் படங்களைப் பகிர்ந்து “உங்கள் மத்தியில் உங்கள் ராகுல்” என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் அவர் உரையாடினார். அதேபோல் பேருந்து ஒன்றில் பயணம் செய்து பெண் பயணிகளிடமும் உரையாடினார். கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின்போது, உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடனும் உரையாடினார். அப்போது உணவகம் ஒன்றில் அமர்ந்து அவர்களுடன் மசாலா தோசை சாப்பிட்டு காப்பி குடித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், டெல்லி முகர்ஜி நகரில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களை சந்தித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.