ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்னும் சில மாதத்தில் சட்டசபை தேர்தில் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இது ஊரறிந்த விஷயமாக இருக்கும் நிலையில் தான் முதல்வர் பதவிக்காக அங்கு பாஜகவிலும் உரசல் ஏற்பட்டுள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் இருக்கிறார். இங்கு கடந்த 2018ல் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகள் 13 பேர், ஆர்எல்பி கட்சியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா 2 பேர், ஆர்எல்டி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற சச்சின் பைலட் முக்கிய பங்காற்றினார். முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அசோக் கெலாட்டுக்கு வழங்கப்பட்டது. இதனால் அடிக்கடி சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தி வருகிறார். சமீபத்தில் 18 எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுடன் சென்றதால் அசோக் கெலாட்டில் ஆட்சி கவிழும் நிலையை சந்தித்தது. இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் தான் விரைவில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகயை சூழலிலும் கூட அசோக் கெலாட் கூட சச்சின் பைலட் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ‛‛என் அரசு கவிழும்போது வசுந்தராஜே (பாஜக முன்னாள் முதல்வர்) தான் காப்பாற்றினார்” என்றார். இதற்கு சச்சின் பைலட் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி அவர், ‛‛அசோக் கெலாட்டின் தலைவராக வசுந்தராஜே உள்ளார். வசுந்தராஜே ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது இப்போது புரிகிறது” என்றார்.
காங்கிரஸில் இவர்கள் 2 பேர் இடையே இப்படி யுத்தம் நடந்து வரும் நிலையில் தான் பாஜகவிலும் மோதல் உருவாகி உள்ளது. அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே அல்லது தற்போதைய மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரில் ஒருவருக்கு தான் முதல்வர் பதவி வழங்கப்படும். இவர்கள் 2 பேருக்கும் இடையே நீண்டகாலமாகவே சுமூகமான உறவு இல்லை.
இந்நிலையில் தான் வசுந்தரராஜே மீதான ஊழல் குறித்து விசாரிக்க சச்சின் பைலட் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறுகையில், ‛‛ஊழலில் யார் ஈடுபட்டிருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பின்னணியில் கஜேந்திரகடா ஷெகாவத், வசுந்தரராஜேவை மனதில் வைத்து தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போதைய சூழலில் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் சக்திவாய்ந்த தலைவராக கஜேந்திரசிங் ஷெகாவத் உள்ளார். மேலும் அமித்ஷாவின் ஆதரவு இவருக்கு உள்ளது. சமீபத்தில் கூட பாஜக மாநில தலைவர் பதவிக்கு அவரது பெயர் முன்னிலையில் இருந்தது. இதனால் விரைவில் வசுந்தரராஜேவும் சட்டசபை தேர்தலையொட்டி தீவிரமாக அரசியலில் இறங்குவார். இந்த வேளையில் கஜேந்திரசிங் ஷெகாவத் மற்றும் வசுந்தரராஜே இடையேயான பிரச்சனை இன்னும் கூட விஸ்வரூபம் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் சமீபகாலகமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவினர் சொந்த கட்சியினர் மீதே தொடர்ந்து பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு நடைபெற உள்ள தேர்தலில் எதிரொலிக்கும், இதனால் பயன்பெறுவது யார்? பாதிக்கப்படுவோர் யார்? என்பதை அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். .