சென்னை: ரூ 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
அது போல் 89 சதவீத ரூ 2000 நோட்டுகள் 2016 இல் புழக்கத்தில் விட்டதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இன்று முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.
இன்று முதல் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை மாற்றச் செல்லும் முன்பு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்வோம். ரூ 2000 நோட்டுகளை மாற்ற இன்னும் 4 மாதங்களுக்கு அவகாசம் இருப்பதால் வங்கிகளுக்கு அவசரமாக செல்ல வேண்டாம். அவசரம் இன்றி நிதானமாக ரூ 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 எண்ணிக்கையிலான ரூ 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். ரூ 2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வ பண பரிமாற்றத்திற்கு உகந்தது. இதன் காரணமாக மக்கள் ரூ 2000 நோட்டுக்களை வர்த்தக தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. KYC (Know Your Customer)விதிமுறைகளை அறிந்து கொள்வது நல்லது. ரூ 50 ஆயிரத்திற்கும் குறைந்த தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் போது எந்தவித ஆவணங்களும் தேவைப்படாது. ஆனால் ரூ 50 ஆயிரத்திற்கு அதிகமாக செல்லும்போது உங்களின் பான் எண்ணை வழங்குவது அவசியம்.
ரூ 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள பயனர்கள் எந்த வித செல்லான்களையும் வங்கியில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ 20 ஆயிரம் வரையில் தொகையை மாற்றிக் கொள்ள பொதுமக்கள் எந்த சல்லானையும் பூர்த்தி செய்து கொடுக்க தேவையில்லை. ரூ 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றும் நடைமுறை எளிமையாக இருத்தல் வேண்டும் என வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரொக்க பரிமாற்றத்தில் ரூ 2 ஆயிரம் நோட்டுக்கள் 10.8 சதவீதமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ரூ 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதால் பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படாது. பெரும்பாலான ரூ 2 ஆயிரம் நோட்டுக்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் திரும்ப பெறப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. ரூ 2000 நோட்டுகளை மாற்றும் மக்களுக்கு அதற்கு பதில் வேறு டினாமினேஷனில் ரூபாய் நோட்டுகளை தர கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வசிப்போருக்கு இந்த விஷயத்தில் சிறப்பு விதிவிலக்கு வழங்கப்படும் என தெரிகிறது.