போபால் :மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த, 2 மாத சிவிங்கிப்புலி குட்டி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் உட்பட எட்டு சிவிங்கிப்புலிகளை, ம.பி., மாநிலம் ஷியோபுர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், 2022 செப்., 17ல், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப்புலிகள் நம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டன.
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, ‘ஜவாலா’ என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி, கடந்த மார்ச் மாத இறுதியில், நான்கு குட்டிகளை ஈன்றது.
இந்த நான்கு சிவிங்கிப்புலி குட்டிகளில் ஒன்று, நேற்று உயிரிழந்தது.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நான்கு குட்டிகளில் ஒரு குட்டி மட்டும் எந்த அசைவும் இல்லாமல், ஒரே இடத்தில் இருந்தது. இது குறித்து, கால்நடை டாக்டர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவிங்கிப்புலி குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அது உயிரிழந்தது.
பிறந்ததில் இருந்து குட்டி பலவீனமாக இருந்ததால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவிங்கிப்புலி குட்டியுடன் சேர்த்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், மொத்தம் 4 சிவிங்கிப்புலிகள் உயிரிழந்துள்ளன.
தற்போது, மூன்று குட்டிகள் உட்பட மொத்தம் 20 சிவிங்கிப்புலிகள் குனோ தேசிய பூங்காவில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்