GT v CSK: ரிங் மாஸ்டராக ஆட்டத்தைக் கட்டுப்படுத்திய தோனி; சாத்தியமே இல்லாத வெற்றி கைவந்தது எப்படி?

கடந்த தொடரில் பிளேஆஃப் சுற்றுக்குள் எட்டிக்கூடப் பார்க்க முடியாமல் இருந்த சிஎஸ்கே-வை தோனியின் மாஸ்டர் மைண்ட் இம்முறை ஃபைனலுக்குள்ளேயே நுழைய வைத்துள்ளது.

இரு சீசன்களிலும் குஜராத்தினை இதுவரை சிஎஸ்கே வென்றதே இல்லை என்ற கணக்குகள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சற்றே ரசிகர்களைக் கலக்கமடையச் செய்திருந்தன. ஆனால் லீக் சுற்றில் வேண்டுமெனில் தடுமாறியிருக்கலாம் பிளேஆஃபில் வேறு விதமான ஆட்டத்தைக் காட்டுவோம் என தோனி தனது படைகளைக் கொண்டு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

GT v CSK

முதல் பாதியில் பேட்டிங் செய்ய வந்த அத்தனை சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கும் ரன் எடுப்பது என்பதே மணலில் கயிறு திரிப்பது போன்றே இருந்தது. ஸ்லோ பிட்ச் என்பது மட்டுமல்ல திறமை மிகுந்த குஜராத் பௌலிங்கும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லோ பால்களாலும் பேக் ஆஃப் லெந்த் டெலிவரிகளாலும் கட்டம் கட்டினார்கள் என்றால், ஸ்பின்னர்கள் ஃப்ளாட் டெலிவரிகளால் ஸ்கோர் செய்யும் அத்தனை ஆப்சன்களையும் அடைத்துவிட்டனர். எந்தப் பக்கமிருந்து அடி விழுமென்றே தெரியாத காற்றுப் புகாத பன்ச் பேக்கில் அடைக்கப்பட்டு பேட்டிங் செய்து கொண்டிருந்ததுபோல்தான் பேட்ஸ்மேன்கள் ஆடினர்.

GT v CSK

கான்வேயாலும் கூடுதல் அழுத்தம் அவர்களது பக்கம் சேர்ந்தது. அவரது ஆங்கரிங் ரோலே பளு கூட்டி கப்பலை மூழ்கடிக்கும் பயங்காட்டியது. மிக மந்தமாக அவர் ஆட, அதனை ஈடுகட்டும் விதமாக மறுமுனையிலிருந்தவர்கள் தவறான ஷாட்டுக்குப் போவது நிகழ்ந்தது. அதில் பல சமயம் அதிர்ஷ்டம் கெய்க்வாட் பக்கம் அதிகமாகவே சுடர்விட்டது.

ஆடிய இரண்டாவது ஓவரிலேயே புதுமுக வீரர் நல்கண்டே வீசிய ஸ்லோ பாலில் சிக்கத் தனது விக்கெட்டை கெய்க்வாட் பறிகொடுத்தார். ஆனால் அது நோ பால் ஆகி அவரைத் தப்ப வைத்தது மட்டுமின்றி பல பந்துகளும் எட்ஜ் வாங்கியும்கூட கெய்க்வாட்டைக் காப்பாற்றின. அபாயத்திலிருந்து மீண்டதும் அதிவேகமாகச் சுரந்த அட்ரலின் உந்தியதில் அடுத்த இரு பந்துகளும் பவுண்டரிகளுக்குப் பறந்தன. மற்றபடி மிக மெதுவான தொடக்கத்தை பவர்பிளேயில் கெய்க்வாட்டும் கொடுத்திருந்தார். அக்கட்டத்தில் அடிக்கப்பட்ட 17 டாட் பந்துகளில், 12 கெய்க்வாட்டால் அடிக்கப்பட்டன. பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப்பாகக் கவனிக்கும் இந்த இருவருமே முதல் பத்து ஓவர்களில் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் வீசிய ஓவர்களில் பெரிதாக ரன்களைச் சேர்க்கத் தவறிவிட்டனர்.

GT v CSK

துபே விஷயத்திலும் சிஎஸ்கேவிற்கு ஏமாற்றமே. இந்த சீசனில் சுழற்பந்துகளில் அவர் அடித்த பவுண்டரிகள் 3 தான், ஆனால் சிக்ஸர்கள் 20. மத்திய ஓவர்களில் ரன்கள் சேர்வதை அவரது கேமியோக்களே முடிவுசெய்து வந்தன. கெய்க்வாட்டுக்கு எதிராக அவரது விக்கெட் அதுவும் ஸ்பின் பந்தில் விழாமல் இருந்திருந்தால் அதிக பந்துகளைச் சந்திக்காவிட்டாலும் சத்தமேயின்றி ரன்களை ஏற்றிவிட்டிருப்பார். அடுத்த வந்த ரஹானேவும் வேகம் என்ற வார்த்தையைச் சுமந்து வரும் பந்துகளை மட்டுமே அடித்துப் பழக்கப்பட்டவர். பவர்பிளேவுக்குள் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கையிலேதான் அவரது பலமும். மறுபக்கம் செட்டிலாகியிருந்த கான்வே முயன்றும்கூட பந்துகளை கனெக்ட் செய்ய முடியவில்லை. அவரது ஜோனுக்கு வெளியே இறங்கியிருந்த ரஹானேவாலும் பெரிதாக ரன்களைச் சேர்க்க முடியவில்லை. நான்கு ஓவர்கள் பந்து பவுண்டரி லைனையே பார்க்காமல் ரன்களற்ற ஓவர்களாக வறண்டன.

ஷமி வீசிய இறுதி ஓவரில், கிடைத்த வேகத்தால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் பேட்கள் சற்றே உயிர்ப்பிக்கப்பட்டு 15 ரன்கள் விரைந்து வந்து சேர்ந்தன. அதோடு கூட ஜடேஜாவும், ராயுடுவும் தத்தம் பங்கிற்குக் காட்டிய சின்ன எழுச்சி, அணியின் ஸ்கோரினை 172-ஐ எட்ட வைத்தது. முதல் 10 ஓவர்களில் வந்த 85 ரன்களைவிட, இரண்டு ரன்கள் மட்டுமே கூடுதலாக இறுதி பத்து ஓவர்களில் வந்து சேர்ந்தன. சற்றும் ஆதரவளிக்கா களமும் ஒரு காரணம். எனினும் இதுவே டிஃபெண்ட் செய்யக் கூடியதென்பதே தோனியின் கேப்டன்ஷிப் காட்டியது.

GT v CSK

குஜராத்தும் ஒரு சிறிய தவற்றினை செய்திருந்தது. காரினை ஓட்டப் பழகுபவரை நெடுஞ்சாலையில் ஓட்டிப் பழக வைப்பது சமயோசிதமல்ல. பதுக்கி வைத்துப் பாய வைக்கிறோம் என்று நினைத்தார்களோ அல்லது அவரது கட்டர்கள் ஆபத்தானவை என்பதை யோசித்து இறக்கினார்களோ, புதுமுக வீரர் நல்காண்டேவை பிளேஆஃப் போன்ற முக்கியப் போட்டியில் களமிறக்கியிருந்தனர். ஃபார்மின்றி தவித்த யாஷ் தயாலை வெளியே அமர்த்திய வரை சரிதான், ஆனால் ஜோஸ்வா லிட்டில் போன்ற பிரைம் டைமிலிருக்கும் பௌலர் திரும்பி வந்துமே அவரை விடுத்து ஷனகாவை உள்ளே வைத்துக் கொள்வதற்காக நல்காண்டேவினை இறக்கியிருந்தனர். ஹர்திக் பாண்டியாவும் பௌலிங் செய்ய முடியாத நிலையில் இதுதான் சற்றே தவறான முடிவாக முடிந்தது. 2021-ல் உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தவர் என்பதால் சேர்க்கப்பட்ட நல்கண்டே, நான்கு ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்ததும் இலக்கை சற்றே ஏற வைத்தது. இந்த தவறு நேராமலிருந்திருந்தால் முடிவும் மாறியிருக்கலாம்.

சேஸிங்கின் போது பேட்ஸ்மேனாக தோனி, அதிக இலக்குகளைத் துரத்தும் சமயத்தில் நேர்த்தியாக அதனைத் திட்டமிடுவதில் எவ்வளவு வல்லவரோ அதே அளவு ஒரு கேப்டனாக ஸ்லோ பிட்ச்களில் குறைவான ஸ்கோரினை டிஃபெண்ட் செய்யத் திட்டம் வகுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல, பவுண்டரி லைனுக்கு வெளியே நின்று வியூகம் வகுக்கும் நெஹ்ராவிற்கும் முன் செல்வதாகவே அவரது திட்டங்கள் இருக்கும். தனக்கு வேண்டுமானதைக் கேட்டு பௌலர்களைப் பகடைகளாக அவர் உருட்டினால் விழாத விக்கெட்டுகளும் உண்டா? இந்தப் போட்டியிலும் அது நடந்தேறியது.

GT v CSK

புதுப்பந்தினை ஸ்விங் செய்ய தீபக் சஹாரிடம் தர, கடந்த சில போட்டிகளாக ரிதத்தில் செட்டிலாகி பவர்பிளேயில் விக்கெட் வேட்டையாடி வரும் அவரது கோல்டன் டச், இப்போட்டியிலும் தொடர்ந்தது. அடித்து ஆடும் நோக்கத்தில் பவுண்டரியோடு தொடங்கிய ஹர்திக் பாண்டியாவையும் தீக்ஷனாவின் ஷார்ட் ஆஃப் லென்த் டெலிவரி வெளியேற்றியது. இந்த இரு விக்கெட்டுகளும் பவர்பிளேவுக்குள் 41 ரன்கள் மட்டுமே வருமளவு ரன்ரேட்டினை மட்டுப்படுத்தின.

பவர்பிளேயின் இறுதி ஓவரிலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு தோனி ரன்கள் சேராமல் நெருக்கடி தந்ததுதான் குஜராத் செய்த அடுத்தடுத்த தவறுகளுக்குக் காரணமாகின. சமீபத்தில் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டது போல சுழற்பந்துகளால் தோனி பின்னிய வலையில் குஜராத் அந்தக் கட்டத்தில் சரியாகவே மாட்டிக் கொண்டது. 11 – 15 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை குஜராத்விட்ட புள்ளியிலேயே அவர்களது ராஜ்ஜியம் ஆட்டங் காண ஆரம்பித்தது.

முக்கிய மேட்ச் வின்னிங் ஸ்பெல்லினை ஜடேஜா வீசினார். இதற்கு முந்தைய போட்டிகளில் அவரது பேட் செய்யத் தவறியவற்றைக் கூட பந்துகள் சரியாகச் செய்து முடித்துள்ளன. இப்போட்டியிலோ மதிப்புமிக்க ரன்களை முதல் பாதியில் சேர்த்தது மட்டுமின்றி, மில்லர் மற்றும் ஷனகாவினையும் ஜடேஜா வெளியேற்றினார். தீக்ஷனாவை அட்டாக் செய்வதற்காக முன்கூட்டியே இறக்கப்பட்ட ஷனகாவினை ஜடேஜாவின் குட் லென்த் பால் வெளியேற்றியது. அதற்கடுத்து தான் வீச வந்த ஓவரிலேயே மில்லரின் விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்திவிட்டார்.

GT v CSK

பவர்பிளேவில் தன்னால் எடுக்க முடியாத கில்லின் விக்கெட்டை மத்திய ஓவர்களில் வந்து தீபக் சஹாரே தனது ஸ்லோ பவுன்சரால் விழ வைத்தார். அங்கேயும் தோனியின் வியூகம் வென்றது. ஸ்பின்களுக்கு நடுவில் கில்லுக்காக ஒரு ஓவர் தீபக் சஹாருக்குத் தரப்பட்டு அதன் மூலம் வைக்கப்பட்ட கண்ணி வெடி அது. வழக்கம் போல தனக்குப் பிடித்தமான புல் ஷாட்டினை ஆட முயன்று கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கில்.

இடைச் சொருகலாகத் தரப்பட்ட ஒரு ஓவரில் பதிரனா வொய்டுகளால் பொறுமையைச் சோதித்தாலும் அவர் வீழ்த்திய விஜய் ஷங்கரின் விக்கெட் திருப்பு முனையானது‌. அதேபோல் 17வது ஓவரில் 19 ரன்களை அள்ளித் தந்து அதனைக் காஸ்ட்லி ஓவராக்கிய துஷார், ரஷித் கானின் விக்கெட்டை வீழ்த்தி குஜராத்தின் கடைசி நம்பிக்கையையும் இருளடையச் செய்தார். டீப் பாயின்ட்டில் ஃபீல்டரை நிறுத்தி, லோ வொய்ட் ஃபுல் டாஸின் மூலமாக ரஷித் கானுக்கும் தோனி கட்டம் கட்டியிருந்தார்.

GT v CSK

இடையில் பதிரனா 16வது ஓவரை வீச வந்தார். ஆனால், கள நடுவர்கள் அவரை பந்து வீச அனுமதிக்கவில்லை. உடனே தோனி நடுவர்களிடம் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? விரிவாக இந்த லின்க்கில் படிக்கலாம்.

17வது ஓவரின் இரண்டாவது பந்தினை சேனாபதி மிஸ் ஃபீல்ட் செய்ய அவரை பொறுமையாகக் களத்தில் இருக்குமாறு ஆசுவாசப்படுத்தினார். அதே ஓவரில் அடுத்த இரு பந்துகளில் அதே சேனாபதி நல்கண்டேவின் ரன் அவுட்டுக்குக் காரணமானார்.

GT v CSK

ஒவ்வொரு தருணத்திலும் சிஎஸ்கே வீரர்கள் சற்றே தடுமாறினாலும் கம்பேக் கொடுத்துக் கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது. தோனியின் வழிகாட்டலும் பௌலர்களின் ஒத்துழைப்பும் அவர்களது ஒவ்வொரு தவற்றின் பின்விளைவுகளையும் நேர் செய்து கொண்டே வந்தது. அதுதான் 15 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கும் காரணமாகியது.

குஜராத்துக்கு இது எட்ட முடியாத இலக்கல்ல. 200+ ஸ்கோரினையே சுலபமாகக் கடப்பவர்கள் களத்தினைக் கணித்து சற்றே பொறுமையாக ஆடியிருக்க வேண்டும். இந்தக் களத்தை நன்றாக அறிந்த அதுவும் ஃபார்மில் உள்ள விஜய் ஷங்கரை ஒன்டவுனில் இறக்காமல், தான் முன்னின்று ஆட வேண்டுமென்ற முனைப்பில் ஹர்திக் பாண்டியா வந்ததும் தந்திரோபாயத்தின்படி சரியான முடிவல்ல. அங்கேயே சறுக்கத் தொடங்கி விட்டது குஜராத். பனிப்பொழிவு இருக்குமென முன்கூட்டிக் கணிக்கப்பட அது இல்லாமல் போனதும் சிஎஸ்கேவிற்குச் சார்பாக முடிந்து 10வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் அணியைப் பெருமிதத்தோடு நுழைய வைத்துள்ளது.

மூன்று சக்கரத்தில் ஓடக்கூடிய பேலன்ஸ் அற்ற வண்டியாக சீசனின் தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட சிஎஸ்கே பௌலிங் யூனிட்டினை, சரியான ஓட்டுநர் இருந்தால் இரு சக்கரத்தில்கூட ஓடவைத்து இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என தோனி என்னும் அசகாய சூரரின் கேப்டன்ஷிப் நிரூபித்துள்ளது.

GT v CSK

சிங்கத்தினைக் கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டராக பௌலர்களை அவர் பயன்படுத்திய விதம்தான் இந்த வெற்றிக்கு வித்திட்டு உள்ளது. இனி இறுதிச் சுற்றில் திறன் காட்டும் வரை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் இருக்கிறது.

சிஎஸ்கே இந்த முறை கோப்பை வெல்லுமா? கமென்ட்டில் சொல்லுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.