ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’.
ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இப்படம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனால் இப்படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் ராஜமெளலி ஆகியோருக்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படத்தையொட்டி இப்படி மகிழ்ச்சியான செய்திகள் வந்த வண்ணமிருக்க தற்போது, ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் மிடுக்கான பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்து பார்வையாளர்களை மிரட்சியில் ஆழ்த்திய நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அயர்லாந்தைச் சேர்ந்த 58 வயதான ஹாலிவுட் நடிகரான ரே ஸ்டீவன்சன், 1990-களில் தொலைக்காட்சி தொடர்களில் ஆரம்பித்து ‘King Arthur’, ‘Punisher: War Zone’, ‘The Book of Eli’, ‘The Other Guys’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவரது இறப்பிற்கு ஹாலிவுட் தொடங்கி டோலிவுட் வரை பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Shocking… Just can’t believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.
My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD
— rajamouli ss (@ssrajamouli) May 23, 2023
அந்த வகையில் இயக்குநர் ராஜமெளலி, “மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது… இந்தச் செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. ரே தன்னுடைய ஆற்றலையும் துடிப்பையும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பின் செட்டுகளுக்கு கொண்டு வந்தவர். அந்த ஆற்றல் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் பரவியது. அவருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்..” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.