சென்னை: சரத்பாபுவின் உடல் சென்னை திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், காலையிலேயே தனது நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலங்கிய கண்களுடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்தை அறைந்ததற்காக நாசர் பல ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.
ஆனால், முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை அடித்த போது அந்த காட்சியை பார்த்து எந்தவொரு ரசிகரும் சரத்பாபுவை திட்டவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் அப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை ரசிகர்களும் உணர்ந்து வைத்திருந்தனர்.
நண்பனின் மறைவு: நடிகர் ரஜினிகாந்த் உடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து மற்றும் பாபா (கேமியோ) உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு உயிரிழந்த செய்தியை அறிந்ததுமே மனமுடைந்து போய் விட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

சரத்பாபுவின் மறைவு செய்தி அறிந்ததுமே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என இரங்கல் தெரிவித்து இருந்தார் சூப்பர் ஸ்டார்.
நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்: தனது உயிர் நண்பரான சரத்பாபுவின் மறைவு செய்தி அறிந்ததில் இருந்தே வேதனையில் ஆழ்ந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், உடனடியாக தனது இல்லத்தில் இருந்து திநகரில் உள்ள சரத்பாபுவின் இல்லத்திற்கு வருகை தந்தார்.

பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் சூழ அனைவரையும் அப்புறப்படுத்தி விட்டு தனது நண்பர் சரத்பாபுவின் திரு உடலுக்கு கடைசி மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த்.
கலங்கிய கண்கள்: நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்தாலும், கலங்காமல் இருந்து வந்தார். ஆனால், தனது நண்பர் சரத்பாபுவின் உடலை அப்படி பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டார்.

கருப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு கலங்கிய கண்களுடன் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர் சரத்பாபுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொண்டார்.
சிகரெட்டை தட்டி விடுவான்: நான் புகை பிடிக்கக் கூடாது என ரொம்பவே உரிமையாக கண்டிக்க கூடிய ஒரே நண்பன் சரத்பாபு தான். நான் சிகரெட் பிடித்தாலே தட்டி விடுவான்.
அவனுக்கு சிகரெட் பிடிப்பது கொஞ்சம் கூட பிடிக்காது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். யாரிடமும் கோபம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பழக கூடியவர் என சரத்பாபுவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறினார்.