சென்னை : நடிகர் சரத்பாபுவின் உடல் கிண்டி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சரத்பாபு காலமானார் : 72 வயதான நடிகர் சரத்பாபு 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிறந்தது என்னவோ ஆந்திராவாக இருந்தாலும், இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரின் அளவான பேச்சு எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த சரத்பாபுவை கே பாலசந்தருக்கும், பாலு மகேந்திராவிற்கும் பிடித்தமான நடிகராக இருந்தார்.
உயிரிழந்தார் : 200க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்துவிதமான ரோலிலும் நடித்துள்ள சரத்பாபு வயது மூப்பு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஹைதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதமாக உடல் நிலைபாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டநிலையில் நேற்று உயிரிழந்தார்.
அஞ்சலி செலுத்திய ரஜினி : சரத்பாபுவின் உடல் நேற்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தி. நகர் இவரது இல்லத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சரத்பாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல சுஹாசினி, நடிகர் சூர்யா,கார்த்தி, பார்த்திபன், வரலட்சுமி, சரத்குமார்,இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம் : இதையடுத்து,சரத்பாபுவின் பூதஉடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் தி-நகரில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு வழி நெடுகிலும் இருந்த மக்கள் நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 2 மணியளவில் இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளாக தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த எதார்த்த நாயகனின் சகாப்தம் முடிந்தது. அவர் மறைந்தாலும், தமிழ் சினிமாவில் சரத்பாபுக்கு என்றும் தனியிடம் உண்டு.