சென்னை: ஹைதராபாத் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மே 22ம் தேதி சிகிச்சை பலனின்றி மூத்த நடிகர் சரத்பாபு காலமானார்.
முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து பிரபலமானவர் சரத்பாபு.
ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள திநகரில் இருக்கும் சரத்பாபுவின் இல்லத்துக்கு அவரது உடல் சற்று முன்னர் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சரத்பாபு காலமானார்: 1951ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி அமதலவலசாவில் பிறந்த நடிகர் சரத்பாபு மே 22ம் தேதி 2023ம் ஆண்டு தனது 71வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கடந்த ஒரு மாத காலமாகவே தீவிர உடல்நலக்குறைவு காரணமாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக மாறி உள்ளது. பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரத்பாபுவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சரத்பாபு உடல்: சென்னை திநகரில் உள்ள வைத்தியராமன் சாலையில் தான் நடிகர் சரத்பாபுவின் வீடு உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபுவின் உடல் சற்று முன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் வருவாரா?: சரத்பாபுவின் மறைவு செய்தி அறிந்ததுமே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு.
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என இரங்கல் தெரிவித்து இருந்தார்.
சென்னையில் இன்று மதியம் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், தனது நண்பனின் உடலை கடைசியாக ஒருமுறை நேரில் வந்து ரஜினிகாந்த் சந்திப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயிலர், லால் சலாம் என ஷூட்டிங்கில் பிசியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், அதையெல்லாம் நிறுத்தி வைத்து விட்டு சரத்குமாரின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்வார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.