வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய மொழியான ‘டோக் பிசின்’-ல் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி நேற்று (மே 22) வெளியிட்டார்.
மொழிபெயர்த்தலுக்கு பெரிதும் உதவியது தமிழர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்நாட்டின் மாகாண கவர்னராக உள்ளார். அவரும், அவரது மனைவியும் (அவரும் தமிழர்) இணைந்து அந்நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர்.
தென்மேற்கு பசிபிக் கடலின் நாடான பப்புவா நியூ கினியாவிற்கு சென்றிருந்தார். இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று (மே 22) நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று, பப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய மொழியான ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜெய்ஸ் மராபே அணிந்துரை எழுதியுள்ளார். பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை ‘டோக் பிசின்’ மொழியில் வெளியிட உதவியது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனை தமிழர்கள் மொழிபெயர்த்தது தெரியவந்துள்ளது.
தமிழர்கள்
ஆம், அந்நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னராக உள்ள சசீந்திரன் முத்துவேல், மற்றும் அவரது மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் திருக்குறளை மொழிபெயர்க்க உதவியுள்ளனர்.
சிவகாசியில் பிறந்தவர் சசீந்திரன் முத்துவேல்; அவரது மனைவி சுபா அபர்ணா சுசீந்திரன் திருநெல்வேலியில் பிறந்தவர். 1999ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களுடன் நன்கு பழகி, அந்நாட்டு மொழியையும் கற்றுத்தேர்ந்துள்ளனர்.
2007ல் தான் இவர்கள் அந்நாட்டின் குடிமகன்களாகினர். பிறகு அம்மாகாணத்தின் கவர்னராக மூன்று முறை தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். சசீந்திரன் முத்துவேல். அங்கு மாகாண கவர்னர் என்பது நம் நாட்டில் மாநில முதல்வருக்கு இணையான பொறுப்பு. இவர் திருக்குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். இதனை பிரதமர் மோடியும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
44வது மொழிபெயர்த்தல்
திருக்குறள் முதன்முதலில் மலையாளத்தில் தான் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் போன்று இதுவரை 43 மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது 44வது மொழிபெயர்த்தலாக பப்புவா நியூ கினியா நாட்டின் டோக் பிசின் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement